அரிசாகா (Arisaka) எனும் பிலிப்பைன்ஸ் படம் ஒன்று பார்த்தேன்/நியாண்டர் செல்வன்

ஒரு மேயர் காரில் போகிறார். நடுக்காட்டில் கார் நிற்கிறது. பாதுகாவலுக்கு வந்த போலிஸே அவரை சுட்டுகொல்கிறார்கள்.

அவர் காரில் போகையில் வேடிக்கையாக தன்னுடன் வந்த பெண் போலிஸ் அதிகாரி மரியானோ என்பவருக்கு ஒரு தகவலை சொல்கிறார்..”ஜப்பானியர்கள் என்னை சுட வந்தார்கள். செத்தது போல நடித்தேன். விட்டுவிட்டு போய்விட்டார்கள்”

காரை நிறுத்தி சுடுகையில் மரியானோவுக்கு அந்த நினைவு வர, செத்தது போல நடிக்கிறார். அவரை விட்டுவிட்டு போய்விடுகிறார்கள்.

காட்டுக்குள் தப்பிபோகிறார். நாவி (Nawi) எனும் பூர்வகுடி குடும்பம் ஒன்றை சந்திக்கிறார்

அவர்கள் பிலிப்பைனின் தாய்மொழி டாகலாக் (Tagalog) மொழியை பேசுவதில்லை. இன்னும் பழமையான பூர்வகுடி மொழியை பேசுகிறார்கள்.

“இது எங்கள் பூர்வகுடி மண். விட்டுகொடுக்கமாட்டோம்” என்கிறார்கள். இலவச் சிகிச்சை, உணவு கொடுக்கிறார்கள். காசு வாங்க மறுக்கிறார்கள்.

மரியானோ போனபின் துரத்தி வந்த காவல்துறை அந்த வீட்டுக்குள் நுழைகிறது. மரியானோவுக்கு அடைக்கலம் கொடுத்ததால் அந்த பூர்வகுடி குடும்பத்தை சுட்டு கொல்கிறார்கள். சுடுகையில் வில்லன் போலிஸ் அதிகாரி “இது உன் நிலம் அல்ல. எங்கள் நிலம். உங்களுக்கு ஏது நிலம்? உன் இனத்தவன் ஒருவன் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிள் திருடுகையில் என் கன்னத்தை கத்தியால் கீறிவிட்டான்” என சொன்னபடி சுடுகிறார்

நாவி என்பது அவதாரின் வரும் பூர்வகுடி இனத்தின் பெயர் என நினைவு வந்தது. ஜேம்ஸ் காமரூன் இதை அடிப்படையாக வைத்துதான் நாவி என பெயர் வைத்தாரா?

நாவி என கூகிள் செய்தால் ஒருவகை வளைந்த கத்தி என காட்டுகிறது. அந்த வளைந்த கத்தியைதான் பழங்குடியினர் வைத்திருந்தார்கள். அதில் தான் காவல்துறை அதிகாரியின் கன்னம் கீறபட்டது

ஆக அங்கேயும் ஏதோ பூர்வகுடி- வந்தேறி, மொழி, நிலம் பிரச்சனை போல

ஆனால் படம் நல்லா தான் இருக்கு.