ஸ்வீட் சட்னியா?/ஜெ.பாஸ்கரன்

நேரமாகி விட்டதால், மதியம் காப்பியுடன் ஏதாவது ‘லைட்’டாக சாப்பிடலாமென்று அந்த மிட்டாய்க் கடைக்குள் நுழைந்தேன் – அருகில் வந்தவுடன், சத்தமின்றித் தானாய்ப் பக்கவாட்டில் வழுக்கி வழி விட்டது கண்ணாடிக் கதவு! சுற்றிலும் வண்ண, வண்ணப் பெட்டிகளில் இனிப்புகளும், கார வகைகளும் – ‘மிட்டாயக் கடை’ என்ற பெயருக்கேற்ப அங்கு பணி புரியும் பணியாளர்கள் தலையில் பிளாஸ்டிக் கவர்த் தொப்பியுடன், மழுங்க சிரைத்த பச்சை முகத்துடன், சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். இந்தியோ, மராட்டியோ, பீகாரியோ ‘வடமொழியில்’ பேசிக்கொண்டிருந்தனர்! கேஷ் மற்றும் பில் கவுண்டர்களில் மட்டும் விபூதியும், குங்குமமும் அணிந்தவர்கள் அமர்ந்திருந்தனர்.

‘அதே கண்கள்’ அசோகன் போல, மணிக்கட்டில் லெதர் ஸ்ட்ராப்புடன் கையில் ஒரு கைத்தடியுடன் விந்தியவாறு நடந்து வந்தார் ஒருவர். மீசையுடன் இரண்டு மூன்று நாள் முள்தாடி – ‘டக் இன்’ செய்யப்பட்ட அரைக்கை சட்டை, தொப்பைக்குக் கீழே பெல்டுடன் பேண்ட், காலில் கறுப்பு இரப்பர் செருப்பு! ‘டேக் அவே’ கவுண்டர் (அந்தக் காலப் பார்ஸல் சர்வீஸின் பின் நவீனத்துவப் பெயர்!) அருகில் ‘வெஜ் பிரட் சாண்ட்விச்’ க்காகக் காத்திருந்தேன். அப்போது கைத்தடிக்காரருக்கும், பச்சை முகத்துக்காரருக்கும் நடந்த உரையாடலை அப்படியே கீழே தருகிறேன்.

“இது என்ன?”

“நூடுல்ஸ் கட்லெட்”

கேட்டவர் முகத்தில் மாற்றமில்லை.

“இது?”

“பன்னீர் பக்கோரா”

“……”

“வடபாவ்”

தலையை பக்கவாட்டில் ஆட்டினார்.

“ரெண்டு சமோசா குடு”

“அங்க பில் போட்டு வாங்க”

“இது வேறயா?” அலுத்துக்கொண்டு, கைத்தடியை ஊன்றியபடி அடுத்த கவுண்டரில், பணம் செலுத்தி, பில் போட்டுக்கொண்டு வந்தார்.

அந்தப்பக்கம் நின்றுகொண்டிருந்த பச்சை முகம், பில்லை வாங்கி, இன்னொரு பிளாஸ்டிக் தொப்பியிடம் கொடுக்க, அவர் உடனே ஒரு அழகிய அட்டைப் பெட்டியில் இரண்டு சமோசாவும், குட்டி பிளாஸ்டிக் கவர்களில் பச்சை நிற காரச் சட்னியும், பிரவுன் நிற ஸ்வீட் சட்னியும் போட்டு, ஒட்டிக்கொடுத்தார்.

வாங்கிகொண்டவர், “இன்னொரு ‘கெச்சப்’ குடு” என்றார். குரலில் தேவையில்லாத அதிகார தோரணை.

அங்கிருந்த மூங்கில் கூடையிலிருந்து சுமார் நான்கு அங்குல நீள, சிவப்பு நிற தக்காளி ‘கெச்சப்’ சாஷேவை எடுத்துத் தந்தார் பச்சை முகம்.

“இன்னாய்யா இது? நான் கேட்டது ‘கெச்சப்’ – பச்சைச் சட்னி கூட குடுப்பீங்களே அது… “

பார்த்துக்கொண்டிருந்த எனக்கே கொஞ்சம் கோபமும், சிரிப்பும் வந்தது. ஆனால் அந்தப் பச்சை முகம் ஒரு உணர்ச்சியையும் காட்டாமல், கெச்சப்பை வாங்கி, மூங்கில் கூடையில் போட்டுவிட்டு, ஸ்டாப்ளர் போட்டு வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களை – ஒன்றில் பச்சை நிறம், மற்றதில் பிரவுன் நிறம் – எடுத்துக் கொடுத்தார்.

“கெச்சப் இல்லாங்காட்டி இதும் பேரு என்னா?”

கெத்தாகக் கேட்டார் வந்தவர்.

“இது ஸ்வீட் சட்னி – ‘இம்லி’ சட்னி”

“ஸ்வீட்டா சட்னியா? சட்னின்னாலே காரம்தான். ஏதோ புதுசா சொல்றீங்க” குரலில் ஒரு வெறுப்பும், நடையில் ஒரு கோபமும் தெரிந்தது.

“தமிழையும், தமிழனுங்களையும் தொரத்திடுவீங்கடா….” என்றபடி வெளியே சென்றார் கெச்சப் கேட்டவர்.

சென்றவர் திசையையே பார்த்தபடி நின்றேன். “சார், வெஜ் பிரட் சாண்ட்விச்”

அனிச்சையாகக் கேட்டேன், “கெச்சப் வெச்சுட்டீங்களா?”

‘மறுபடியும் முதல்லேர்ந்தா’ என்பதைப் போல அவர் பார்த்தது எனக்கு மட்டும்தான் புரிந்ததோ?