விழிப்பு/வேலு இராஜகோபால்

அவள் கண் விழித்தபோது மருத்துவமனையின் ஐ.சி.யு. வார்டில் இருந்தாள். தலை கனமாக இருந்தது. மெல்ல மெல்ல கொஞ்சம் கண் தெளிவாகத் தெரியத் தொடங்கியது. படுக்கையில் இருந்தபடியே நாலாபக்கமும் கண்களைச் சுழலவிட்டாள். வலப்புறமும் இடப்புறமும் வெள்ளைத் துணிகளால் மறைக்கப்பட்ட திரைகள் இருந்தன. மற்ற பேஷண்ட்டுகளைப் பார்க்க முடியவில்லை. யாரிடமாவது பேச வேண்டும் போல் இருந்தது. முழுவதுமாக தன்னினைவுக்கு வந்துவிட்டாள். மருத்துவமனைக்கு அவளைக் கொண்டுவரும்போது அவளுக்கு அரைகுறையாக யாரோ எங்கோ தூக்கிச் செல்வது வரை அரைகுறையாக நினைவிருந்தது. இப்போது பிழைத்துவிட்டேன் என்று ஒரு விதத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இன்னொரு புறம் ஏன் பிழைத்தோம்? அப்படியே போயிருந்தால் ஒன்றும் தெரிந்திருக்காதே என்றும் தோன்றியது. இன்னும் பல கேள்விகள் மனதில் தோன்றின. ‘அவர் வந்தாரா? வருவாரா?’ விழித்துவிட்டாள் என்று தெரியுமா? நடுநடுவில் வந்து பார்த்தாரா? இனியும் தன்னுடன் வாழ விரும்புவாரா?

மூன்று வாரங்களுக்கு முன்னால் பதட்டத்துடன் இதே மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்திருந்தாள். கையில் குழந்தையின் உடல் துவண்டு மூச்சற்று இருந்தபோதே உணர்ந்திருந்தாள். ஆனாலும், டாக்டர் ஒருவேளை உயிர்ப்பித்து விடலாம் என்று சொன்னால்? ஒரு புறம் எப்படி இதை நடக்கவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி மனதை முழுவதும் பாரமாய் அழுத்தியது. மறுபுறம், தன் மீது பழி வந்துவிடுமே என்று அச்சமும் இருந்தது.அன்று மாலையில் ஏதோ அசதியாக இருந்தது. சீக்கிரம் தூங்கிவிட்டாள். அதற்கு முன் நெடுநேரம் தன் வாழ்க்கையை எண்ணி அழுத ஞாபகம் வந்தது. இப்போதும் கூட கண்ணீர் இருபுறமும் வேகமாய் வழிந்து காதுகளில் வழிந்து தலையணையை நனைத்தது. அவசரமாய் இடது கையை எடுத்துத் துடைத்துக் கொண்டாள். வலது கை மணிக்கட்டில் இன்னும் ட்ரிப் ஓடிக் கொண்டிருந்தது. நேற்று இரவுக்குப் பின் சாப்பிடவில்லை. அது நேற்றா இல்லை முந்தா நாளா? இன்னும் தெளியவில்லை. இது இரண்டாவது நாளா மூன்றாவது நாளா? இந்த முறை கண்டிப்பாகப் போய்விட வேண்டும் என்றுதான் விடுமுறையன்று காலையிலும் மத்தியானமும் இரவிலும் சாப்பிடாமல் பட்டினி கிடந்து பக்டோனைக் குடித்தாள்.

இதற்கு முன்னால் கண்விழித்த நேரத்தில் தன்னைப் பார்க்க வந்த நர்ஸ் சொன்னாள் “ஏம்மா இப்படிச் செஞ்ச? அந்தாளுதான் திடீர்னு வீட்டுக்கு வந்தவரு உன்னைக் கொண்டுவந்து சேர்த்தார்”. இனிமேல் என்ன நடக்கும். அவள் தெளிவாகத்தான் இருந்தாள். மருந்து குடித்ததே அதற்குத்தான். முடிந்தால் வாழவேண்டும். இல்லையென்றால் சாகவேண்டும். நர்ஸ் கொடுத்த தகவல் அவர் மனதில் ஈரம் இருப்பதை உறுதிப்படுத்தியது. ஏதோ அவள் வாழ வேண்டும் என்று இருக்கிறது. இனி பிடித்துக் கொள்ள வேண்டும். நடக்கக் கூடிய காரியமா? அவள் நினைத்தது போல் இதுவரை எதுவும் நடக்கவில்லை. எத்தனையோ தெய்வங்களை துதித்துக்கொண்டிருக்கிறாள். மீண்டும் கண்ணயர்வது போலிருந்தது. அதற்கப்புறம் என்ன நடந்ததென்று தெரியவில்லை. அந்த நாளும் அப்படியே கழிந்தது.

மூன்று வாரங்களுக்கு முன்னால், ஒருநாள் இரவில் குழந்தை அவளருகில் உறங்கிக் கொண்டிருந்தது. ’நான் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டிருந்தான். மீண்டும் மீண்டும் அவன் தன்னை உதாசீனம் செய்தான் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டான். ஆனால் அவளால் அவனை இழக்கமுடியாது. அவளுக்கு வேறு யாருமில்லை. ஏற்கனவே அலுவலகத்தில் கண்ட நாய்களும் அவள் பின்னே வந்து கொண்டிருந்தன. எதிரியாகிவிட்ட அப்பா எல்லா இடங்களிலும் இழிவாகப் பேசிக் கொண்டிருந்தார். அவர் எப்படிப்பட்டவர் என்று அவளுக்கு மட்டுமல்ல மேலூரிலும், நாலாட்டின்புத்தூரிலும் பலருக்குத் தெரியும். கடையநல்லூரில் மாற்றலாகி வந்திருந்த இடத்தில் யாருக்கும் ஒன்றும் தெரியாது. அவள் இயல்பாகவே கூச்சலிட்டுப் பேசுகிறவள். அதனால் தான் பல நாய்கள் அவளிடம் வழிந்தாலும் நெருங்குவதில்லை. அவர்களிடமிருந்து விலகி இருப்பதற்கான தந்திரம் அது. வாயாடியாக இல்லையென்றால்… பிழைக்க முடியாது. வாழ்நாளெல்லாம் எல்லோரையும் அப்படி தூரவே வைத்துவிட முடியாது என்று அவளுக்குப் புரிந்தது. அவளுக்கும் சாய்ந்து கொள்ள ஒரு இடம் தேவை. மனிதனாக இருந்தால் சவுகரியம். அவனையும் விட்டுவிட்டால்? அழுகை அவளது நிரந்தர ஆயுதமாக இருந்தது. ஆனால் அந்த அழுகை அன்று பயன்படவில்லை. அதற்கும் ஒரு எல்லையிருந்தது. அவனையும் பொறுத்தது அது. அதனால் பக்டோனைக் குடித்தாள். பத்திரிக்கையில் ஒரு ஓரக் குறிப்பாக மறைந்துவிடும் ஒரு உயிர். அவன் பயந்துவிட்டான். பயந்திருக்க வேண்டும். இல்லையெனில் ‘உன்னைப் பார்க்க இனி வரமாட்டேன்’ என்று சூளுரைத்துவிட்டுப் போனவன் அதே இரவில் ஏன் திரும்பி வந்தான்? அப்படியே கூட விட்டிருக்கலாம். ஆஸ்பத்திரியில் ஏன் சேர்த்தான்? மீண்டும் மனம் மாறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஏற்கனவே திருமணமானவன். அதனால் வாய்ப்புக் கிடைத்தால் ஓடிவிடுவான். அந்த விபத்து எப்படி நடந்தது என்றே புரியவில்லை. மைல்கற்களுக்குப் பதிலாக விபத்துக்களால் போடப்பட்ட சாலை அவள் வாழ்க்கை. அப்பாவிடமிருந்து இன்று வரை.

அன்று அப்படித்தான். குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த சிம்னி விளக்கை குறைத்து வைத்தாள். தனக்கும் தொட்டிலுக்கும் எட்டாத இடத்தில் சிம்னிவிளக்கைத் தள்ளிவைத்தாள். சிம்னி விளக்கைச் சுற்றி மூடியிருக்கும் கண்ணாடி கீறல் விழுந்திருந்தது. நாளைக்கு அதை மாற்ற வேண்டும் என்று தினமும் நினைத்தாலும், இரவில் தூங்கும் போது அந்த விளக்கை ஏற்றி வைக்கும் வேளையில் ஞாபகம் வரும். விளக்கு இல்லையென்றால் ரொம்பவும் இருட்டாக இருந்தது. ஆண் துணை இல்லாத வீட்டில் இருளில் இருப்பது முடியாத காரியம். அதுவும் மின்சாரம் இல்லாத வீடு. அரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்தால் வெளிச்சம் அதிகமாக இருந்தது. இந்தச் சின்ன வீட்டைத் தவிர வேறு வீடும் கிடைக்கவில்லை. அவன் அவளை வைத்துக் கொண்டிருக்கிறான் என்ற பேச்சால், நல்ல மனிதர்கள் இருக்கும் வீடுகளில் அவளுக்கு இடமில்லை. வேறு காரணங்களைச் சொன்னார்கள். அவளுக்குப் புரிந்திருந்தது. சமதளமற்ற சிமென்ட் தரை. ஒரேஒரு அறை. அதன் ஒருபுறம் சமையல் செய்ய அடுப்பு இருந்தது. இதையெல்லாம் விட அவள் மீது பழி வருவதற்கென்றே அவனும் அவளும் அன்று மாலையில் சண்டை போட்டிருந்தார்கள். அடிக்கடி வரும் சண்டைதான். இன்னொரு மனைவி ஏற்கனவே இருந்ததால், அதனால் வரும் பிரச்சனைகள். அவை என்ன கொஞ்சமா? அன்றும் கொஞ்சம் அதிகமாகவே வந்தது. ஆண்கள் என்ன சத்தியவான்களா? காதல் வயப்படும் போது சொன்னதை எல்லாம் ஞாபகம் வைத்திருப்பதற்கும் அப்படியே நடந்து கொள்வதற்கும்?

அவள் திடுக்கிட்டு விழிக்கும் போது நேரம் கடந்து விட்டது. ஐம்பத்தி ஐந்தே நாள் ஆன குழந்தை. விளக்கு சரிந்து கிடந்தது. திடீரென்று பிடித்த தீ தரையெங்கும் தீயெரிய, தொட்டிலிலும் தீ பரவி எரிந்து கொண்டிருந்தது. எப்படி நடந்தது? என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.. குழந்தைக்கு மிக அழகான முகம். அவனும் அவளும் எதிர்பார்க்கவே முடியாதபடி அழகிய முகம். அவனுடைய சாடையில் இருந்ததென்று பார்த்தவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் அதை விபத்து என்று யாரும் நம்பவில்லை. அவள் வேண்டுமென்றே செய்துவிட்டாள் என்றே எல்லோரும் சொன்னார்கள். அது தீராத பழியாகி வாழ்நாள் முழுவதும் அவளை வதைத்தது எல்லா உண்மைகளும் அவளுக்கு எதிராகவே இருந்தன. எப்போதுமே அவள் வாழ்வில் எல்லா உண்மைகளும் அவளுக்கு எதிராகவே இருக்கின்றன. அது ஏன் என்று புரிந்ததே இல்லை.

நர்ஸ் அவளது படுக்கையருகில் வந்தாள். ‘இப்பப் பிழைச்சிட்டம்மா! நல்லாப் பாத்துக்க உடம்ப! இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணீருவாங்க! அந்த ஆளு இன்னைக்கு வருவேன்னு சொன்னாரும்மா!’ அவன் மீண்டும் வருவதாகச் சொன்னது ஒரு சாதகமான தகவல். வழக்கம் போல கொடூரமான சண்டைகளுடன் இனி அவனுடன் வாழ்ந்துவிடலாம் என்றே தோன்றியது.. நர்ஸ் வெளியே போனதும் கண்களை மூடி செண்பக வல்லியம்மனை மீண்டும் தொழுதாள். நன்றாக வாழ்ந்தால், நாலாட்டின்புத்தூர் வெள்ளைப் பாண்டி கோயிலில் நூற்றி ஐம்பது தேங்காய்கள் விடலை போடுவதாக வேண்டிக் கொண்டாள்.