இலக்கிய இன்பம் 69/கோவை எழிலன்

அவகெடக்கா சூப்பனகை

கடந்த பாடலில் பார்த்த மாமியாரின் வசவைக் கேட்ட செட்டிநாட்டு மருமகள் சும்மா இருப்பாளா? சூப்பநகை என்று தன் மாமியாரை விளித்து அவள் எதிர் வசவு இடுவதையும் தன் தந்தை தனக்குத் தந்த சீதனங்களைப் பட்டியலிடுவதையும் கவிஞர் கண்ணதாசன் செட்டி நாட்டு மருமகள் மான்மியம் என்று பாடுகிறார். பாடலின் ஒரு பகுதி.

“அவகெடக்கா சூப்பனகை
அவமொகத்தே யாருபாத்தா
அவுகமொகம் பாத்து
அடியெடுத்து வச்சேன்நான்
பத்து வராகன்
பணங்கொடுத்தா எங்களய்யா
எத்தனைபேர் சீதனமா
இவ்வளவு கண்டவுக?
ராமாயணத்திலயும்
ராமனுக்கு சீதைவந்தா
சீதனமா இவ்வளவு
சேத்துவச்சா கொண்டுவந்தா?
கப்பலிலே ஏத்திவச்சா
கப்பல் முழுகிவிடும்
அவ்வளவு சாமான்
அரிசி பருப்புவரை
மாவு திரிச்சுவச்சு
மலைமலையா அடுக்கிவச்சு
ஊறுகாய் அத்தனையும்
ஒண்ணுவிடாமவச்சு
நாக்காலி முக்காலி
நாலுவண்டி ஏத்திவச்சு
பாயும்தலையணையும்
பலவகையா கட்டிவச்சு
ஆளுவீடடங்காத
அழகான பீரோவும்
கண்ணாடிச்சாமானும்
கனத்தவெள்ளி பாத்திரமும்
அம்மி குழவி
ஆட்டுக்கல் அத்தனையும்
கட்டிகொடுத்து என்னை
கட்டிக்கொடுத்தாக
வைரத்தால் கண்டசரம்
வளைககப்பு மோதிரங்கள்
சிறுதாலி பெருந்தாலி
சுட்டியெல்லாம் செஞ்சாக
தூக்கமுடியாம
தூக்கு கழுத்தூரு
முந்நூறு பவுனுக்கு
முள்ளங்கி பத்தைப்போல
எங்கையா ஆத்தா
எனக்குக் கொடுத்தாக
ஒருவேலை சோத்துக்கும்
உதவியில்லை இவ்வீட்டில்”