கவிஞர் லாவண்யாவின் புராணக் கட்டுக்கதைகள் நீக்கக் கவிதை (demythologising poem)/முத்துக்குமார்

கவிஞர் லாவண்யாவின் புராணக் கட்டுக்கதைகள் நீக்கக் கவிதை (demythologising poem)

2001-ஆம் ஆண்டு விருட்சம் வெளியீடாக வந்த கவிஞர் லாவண்யாவின் ‘இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில்’ என்ற கவிதைத் தொகுதியின் முதல் கவிதையே அவரது நகைச்சுவை, எள்ளல் தொனியையும் தெறிக்கும் ஓர்மையையும் ஒருங்கே கொண்டதாக அமைந்துள்ளது. இப்போது படிக்கும் போதும் புதிதாக இருக்கின்றது. தற்காலத்திய கவிதைகள் உலகம் பெரும்பாலும் சுய-பிரஸ்தாபங்களாகவும் தற்சுட்டுப் புனைவுகளாகவும், சமூக நடப்பின் மீதான விமர்சனப்பார்வைகளற்றும் இருக்கும் வேளையில் லாவண்யாவின் கவிதா மொழி அங்கத, நகைச்சுவை, எள்ளல் போன்றவற்றைப் பிரதானப்படுத்துகின்றன. அதே வேளையில் சிறு சிறு உணர்வுகளை, தார்மீக கோபங்களை தெறிக்கும் கூர்மையான நேரடியான வார்த்தைகளால் ஆங்காங்கே இந்தத் தொகுப்பு முழுதுமே சிதறவிட்டுள்ளார். பூடக மொழி, பூசிமெழுகும் பாவனை மொழி இவரது நடையில் இல்லை.காலகதி அன்றாட வாழ்க்கையை அவசரகதியாக மாற்றி விட்டதை அம்மாவுக்கு உணர்த்தும் ‘மெதுவாய்’ என்ற கவிதையில்

“வக்காளவோளி நாட்டில்
குடிக்கிற தண்ணீரை காசு பண்ணுகிறான்
கும்பலான இடமானாலும்
ஒன்னுக்குப் போனாலும் காசு கொடுக்கணும்
அடுத்த பஸ்ஸில் போக முடியாது
மூன்றாவது லேட்டுக்கு
மூதேவி கம்பெனியில்
அரைநாள் சம்பளம் அம்பேல்…

என்று அப்படியே அன்றாட பேச்சு மொழியை, தார்மீகக் கோப வசைமொழியுடன் கலந்து அந்தக் கவிதையின் ஒட்டுமொத்த உணர்ச்சிப் பிரதேசத்திற்குள் தெறிப்பாகப் பயன்படுத்தியதை லாவண்யாவின் கவிதா மனோநிலைக்கும் அவரது சமூகப்பார்வைக்குமான தொடர்பை விளக்க ஒரு எளிய உதாரணமாகச் சுட்டலாம்.

இந்தத் தொகுப்பின் முதல் கவிதையில் புராணக் கட்டுக்கதைகளை தனக்கேயுரிய எள்ளல், நகைச்சுவை பாணியில் கடைசி ஒரு வரியில் தகர்க்கிறார் லாவண்யா:

வானமே எல்லை:

பாதாளத்தில் பாம்பாய் இருந்தேன் பலநாள்
பூமிக்குச் சுற்றத் தெரியாத போது என்
வாலால் சுழற்றி சுற்றக் கற்றுத் தந்தேன்
வால் குறைந்து வண்ணத்துப் பூச்சியானேன்
பூந்தேனலுக்க புலியைப் பிடித்தொருநாள் தின்றேன்
பாம்புமுகம் பூச்சிச்சிறகு புலியுடல் கூடிய
புதியதோர் பிறவியாகி
பார்க்கடலைப் பார்க்கப் போனேன்.
பைக்குள்………
சுருட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்

பொய் சொல்வதற்கொரு வரைமுறையில்லையா?