தாய்ப்பலகை/மதுவந்தி

விருட்சம் 97 வது கவிதை நேசிக்கும் நிகழ்வில் (17.02.2023) வாசித்த கவிதை.

ஒரு வெள்ளிக்கிழமை முற்பகலில்
சுபயோக சுப முகூர்த்தத்தில்
தாய்ப்பலகையில்லாமல்
நானில்லையென என் அறிதிறன்பேசி
சட்டென நின்று போனது.

“தூக்கியெறி தூக்கியெறி”
கலாச்சாரத் தலைமுறைக்கு
முந்திய தலைமுறையென்பதால்
பத்திரமாய் வைத்திருந்த
பழைய அலைபேசி எடுத்து
பொத்தானை அழுத்தினால்
கடவுச் சொல் கேட்டது. .
என் பிறந்தநாள், இணையரின் பிறந்தநாள்,
மண நாள், மகளின் பிறந்தநாள்
எல்லாவற்றையும் மறுத்து
மௌனமாய்ப் பார்த்தது.

ஒரு நாளில் வந்துவிடுமெனச்
சொன்ன வார்த்தை தவறிய
மூன்றாம் நாள் மாலை
புதிய தாய்ப்பலகையோடு
துடைத்து வைத்த சிலேட்டு போல
பழைய தரவுகள் ஏதுமின்றி
சுத்தமான அறிதிறன் பேசி
என் கையில்.
மீண்டும் எல்லாத் தரவுகளையும்
சேகரித்துப் பதிவு செய்ய
யோசிக்கும் போதே அயர்வு.

வாகன உபரிச்சக்கரம் போல
உபரி அலைபேசி கடவுச் சொல்லுடன்
வைத்திருக்க வேண்டுமென
இப்போதைக்குத் தீர்மானம்.

(தாய்ப் பலகை mother board).