
விடுமுறை நேற்று
விலங்கியல் பூங்காவிற்கு
விருந்தாளியாகச் சென்றிருந்தேன்.
ஓரிடத்தில் நிற்காமல் தாவிக்
கொண்டிருக்கும் குரங்குகள்;
ஒரு தத்துவ ஞானி போல
மெல்ல நடை போட்டுக்
கொண்டிருக்கும் கரடி
பாதிச் சேற்றில் அழுந்தியபடி
பெரிதாக உருமாறிவிட்ட
வீட்டுப் பல்லியாய்
மேல் தாடையைத்
தூக்கியபடி ஒரு முதலை.
இந்த நளினம்தான் பெண்மைக்கு
உவமையானதோ
என ஒயில்நடையில்
திரும்பும் மான்கள்
இறுக்கமான புள்ளிச் சட்டையில்
சிறுத்தை ஒன்று.
கொஞ்சம் அழுக்குப் பழுப்பில்
இரு சிங்கங்கள்.
யானைகள், குதிரைகள்,
பாம்புகள்,பறவைகள்
பலதரப்பட்ட விலங்குகளையும்
பார்த்தபடி நின்றிருந்தேன்.
அவற்றின் எந்த முகத்திலும்
துன்பம் பயம் சோர்வு கவலை
எதையும் நான் காணவில்லை.
அவை இயற்கையோடு இயற்கையாக
இயங்கிக்கொண்டிருந்தன.
கட்டுப்பாட்டுக்குள்ளேயே இப்படிக்
கவலையற்றுத் திரிகின்றனவே..
கானகத்துள் இவை எத்துணை
களிப்போடு திரிந்திருக்கும்
என நினைத்தேன்.
கவலையற்ற விலங்குகள் பற்றிக்
கவலைப்பட ஆரம்பித்தேன்.
17/02/2023
