
வானத்தில் ஒரு பூ
ஆடியாடி இறங்கி வந்து கொண்டிருக்கிறது.
அதனோடு
நான்கு வண்ணத்துப் பூச்சிகள்.
ஒரு சிறுமி கீழிருந்து
திடீரென்று சிறகுகளோடு பறக்கிறாள்.
பூவும், சிறுமியும் சந்திக்கிற கணத்தில்
சோடி சோடியாக
எதிர்த் திசையில் பறக்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள்.
கவிதை முடிகிற இடத்தில்
ஏறிக் கொள்கிற வாசகர்கள்
பூவையும், சிறுமியையும் ஏந்தியபடி
தம் வீடுகளுக்குச் செல்கிறார்கள்.
கவிதையால் அழகாகின்றன
இல்லங்கள்.
கவிதையால் அழகாகின்றன
இதயங்கள்.
கவிதையால் ஆறுகின்றன
காயங்கள்.
“வேலை வெட்டியற்ற பயல்கள் “
எனத் திட்டியபடி
இன்னும்
வானத்தையே பார்த்தபடி இருக்கிறான்.
பணம் பெய்யும் மழைக்காக காத்திருப்பவன்.
தகவல் : அனங்கன்
16.02.2022
09.40 am.
