கம்பனைக் காண்போம்—70/வளவ. துரையன்

மழை பொழிகிறது

வளநகர் முனிவரன் வருமுன் வானவன்
களனமர் கடுவெனக் கருகி வான்முகில்
சளசள எனமழைத் தாரை கான்றன
குளனொடு நதிகள்தம் குறைகள் தீரவே
[225]


[முனிவரன்=முனிவன்; வானவன்=சிவன்; களன்=கண்டம், அதாவது கழுத்து; கடு=நஞ்சு; தாரை=நீர்ப்பெருக்கு; குளன்=குளம்]

பிள்ளைப் பேறு அடையவேண்டி தயரதனை யாகம் செய்யுமாறு வசிட்டன் கூற அதற்காக கலைக்கோட்டு முனிவனை அழைத்து வருகின்றனர். அம்முனிவன் எந்த நாட்டில் நுழைகிறானோ அங்கு மழைபொழியுமாம். அவன் உரோமபாதன் எனும் மன்னனின் நகரினுள் நுழைகிறான். அப்போது மழைபொழிவதைக் கம்பன் இப்பாடலில் சொல்கிறான்.

அம்முனிவன் அந்நகருக்கு வந்த உடனேயே மேகங்களெல்லாம் கருநிறமாகி விட்டன. அதற்குக் கம்பன் ஓர் உவமை கூறுகிறான். எப்படியெனில் சிவபெருமான் நஞ்சை உண்ட போது அவர் கண்டமானது எப்படி கருப்பாக   மாறிற்றோ அதே போல மாறி விட்டனவாம். அந்நாட்டின் ஆறுகளுக்கும், குளங்களுக்கும் தம்மிடம் நீரில்லையே என்று ஒரு குறை இருந்ததாம். இப்பொழுது அக்குறை நீங்குமாறு  மழை பொழிந்ததாம். கம்பன் இந்த இடத்தில் மழைபெய்யும் ஓசையைக் காட்டுகிறான். நாம் பனைமட்டையில் நீர் விழுந்தால் அதைச் சொல்ல ‘சள சள’ என்னும் ஒலியைக் குறிப்பிடுவோம். அச்சாதாரண சொற்களையே கம்பன் பயன்படுத்தி, “சள சள என மழைத்தாரை பொழிந்தன” என்கிறான். அவன் கவி சாதாரணமானவர்க்கும் புரிய வேண்டுமன்றோ?