இனிக்கும் தமிழ் – 174/டி வி ராதாகிருஷ்ணன்

தேவாரம் – சிவன் எனும் மலையாளி

ஞான சம்பந்தர் திருவையாறு என்ற தலத்திற்குப் போகிறார்.

அந்த ஊரின் இயற்கைக் காட்சிகள் அவரின் மனதை கொள்ளை கொள்கின்றன.
கைலாய மலையில் இருக்கும் சிவன் வசிக்கும் இடம் அந்த திருவையாறு.
ஊரின் வெளியே நிறைய கரும்புத் தோட்டங்கள்.
அங்குள்ள கரும்புகளில் கணுக்கள் இருக்கின்றன. அவற்றை கண் என்றும் சொல்லுவார்கள்.

அவர் பார்க்கும் போது அந்த கரும்பின் கண்கள் எல்லாம் தூங்குவது போலத் தோன்றிற்று.
ஏன் அப்படி அவருக்கு தோன்றுகிறது

பாடலைப் பாருங்கள்

நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.

பொருள்

நின்று உலாவும்- ஒரு இடத்தில் நில்லாமல் எங்கும் பறந்து திரியும்
நெடு விசும்பு – நீண்ட வானத்தில்
நெருக்கி வரு-ஒன்றாகச் சேர
புர மூன்று- மூன்று உலகங்களையும்
நீள்வாய் -நீண்ட
அம்பு சென்று உலாம் படி – அம்பு சென்று தைக்கும் படி
தொட்ட – விட்ட
சிலையாளி -வில்லைக் கொண்டவன்
மலையாளி – கைலாய மலையில் இருக்கும் சிவன்
சேருங் கோயில்- வந்து அடையும் கோயில்
குன்றெல்லாம் – எல்லா குன்றுகளிலும்
குயில் கூவக் – குயில்கள் கூவ
கொழும்- சிறந்த
பிரச -தென்
மலர் பாய்ந்து -மலரின் மேல் சென்று
வாசமல்கு -வாசத்தைப் பெற்றுக் கொண்டு
தென்றலார் -தென்றல் காற்றானது
அடி வருடச் -பாதத்தை வருட
செழுங் கரும்பு- வளர்ந்த கரும்பு
கண் வளரும் – கண்கள் தூங்கும்
திருவையாறே- திருவையாறே

இறைவன் என்பவன் கோவிலுக்கு உள்ளே மட்டும் இருப்பவன் அல்ல. எங்கும்
நீக்கமற நிறைந்து இருப்பவன்.

எங்கோ உள்ள குன்று, அதில் கண்ணுக்குத் தெரியாத குயில், அது பாடும் இசை,
தலை வருடும் பூங்காற்று, அதில் தவழ்ந்து வரும் இசை, அது கேட்டு கண்
வளரும் கரும்பு….இது எல்லாம் சேர்ந்ததுதான் இறைவன்.

இந்த பிரமாண்டமான இயற்கைதான் இறைவன்.

இறைவனை கோவிலுக்குள் மட்டும் தேடாதீர்கள். கோவிலுக்கு வெளியேயும் அவன்
தான்.பார்க்கும் இடமெல்லாம்,பார்ப்பதெல்லாம் அவன் தான்.

                     -