இலக்கிய இன்பம்/வளவ. துரையன்

ஆசாரக் கோவை

பாடல்18 : உண்ணும் முறை

நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவார் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெடுத்துக்
கொண்டார் அரக்கர் குறித்து.

குளித்து, உண்பதற்குமுன் கை கால்கள் கழுவி வாய் துடைத்து, (மந்திரம் சொல்லி) உண்கலத்தை நீரால் சுற்றி (தூய்மை செய்து) பிறகு உண்பதே உண்ணும்முறையாகும். இம்முறை இல்லாமல் உண்பது அரக்கருக்கு உணவு கொடுப்பதாகும்.

(‘ஓம் பூர் புவஸ் ஸ்வஹ’ என உணவின்மேல் மூன்று முறை தண்ணீர் தெளித்து, கையில் சிறிது ஜலம் விட்டு ஒரு முறை சுற்றி,

‘உண்ணலும் உனதே உயிர்த்தலும் உனதே
உடலுயிர் மனமெல்லாம் உனதே
எண்ணலும் உனதே இச்சையும் உனதே
என்செயல் பயனெல்லாம் உனதே
என்செயல் பயனெல்லாம் உனதே.’

என்று சொல்லி கீழே விட்டுவிட்டு, மீண்டும் கையில் சிறிது நீர்விட்டுப் பருகி, ‘உண்ணும் உணவு அமிர்தமாக ஆகவேண்டும்’ என்று பிரார்த்தித்து உண்ண வேண்டும்.)

பாடல் 19 : உண்ணும் போது

காலில்நீர் நீங்காமை உண்டிடுக; பள்ளியும்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.

பொருள் :
கால் கழுவி, நீர் உலர்வதற்கு முன்னரே (உடனே) சாப்பிட அமந்துவிடவேண்டும்; ஈரம் காய்ந்த பின்னரே படுக்கவேண்டும், என்பது சிறந்த அறிவு உடையவர் முடிவு.

பாடல் 20 : உண்ணும் போது

உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து,
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ யாண்டும்,
பிறிதுயாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு,
உண்க உகாஅமை நன்கு!

உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்கு, கண்ணமர்ந்து,
தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும்
பிறிது யாதும் நோக்கான், உரையான், தொழுது கொண்டு,
உண்க, உகாஅமை நன்கு!

பொருள் :
உணவு உண்ணும் பொழுது கிழக்குத் திசை பார்த்து அமர்ந்து, தூங்காமல், அசைந்தாடாமல், நன்றாக அமர்ந்து, வேறு எங்கும் பார்க்காமல், பேசாமல், உணவை வணங்கி, சிந்தாமல் நன்றாக மென்று உண்ண வேண்டும்.