இரவின் கரைகள்/எல்.ரகோத்தமன்


 
நேற்றய கனவு
வருவதில்லை இன்று!
இன்றய கனவில்
தொடர்வதில்லை
நேற்றய கனவு!
 
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வித இரவு!
ஒவ்வொருவித கனவு!
 
இரவின் வாசலில் நின்று
யாரோ கையசைக்கிறார்கள்!
ஆனால் புலப்படவில்லை
கண்களுக்கு!
 
அது யாரென்று
யோசிக்க நேரமின்றி
அடுக்கடுக்காய் எண்ணங்கள்
நினைவுக் கேணியில்
மிதந்தன!
 
ஒவ்வொரு துளியாய்
கரைந்து கொண்டிருந்த
நீண்ட இரவின் மடியில்
துயில் கொள்ள மறுத்தன
நினைவுகள்!
 
இரவின் கரைகளை
தொட்டுத் தொட்டு
சீண்டிக் கொண்டிருந்த
நினைவலைகளில்
அவ்வப்போது தோன்றி மறைகிறது
ஒரு உருவம்!
 
அது நிச்சயமாக
உன் முகமும் இல்லை
என் முகமும் இல்லை!
 
இருமறுங்கிலும்
பூத்துக் குலுங்கும்
மானுடத்தின் சினேகப் பூக்கள்
இருளில் அமிழ்ந்து கிடக்க
ஒரு கீற்று வெளிச்சம் வேண்டி
இருளை கிழித்துக் கொண்டு
இணைகோடாய் நீள்கிறது
ஒரு நிழல் பாதை!
அடர் வன செருக்களின்
வியாபிப்பினூடே
தோன்றி தோன்றி மறையும்
நிலவின் ஒளிக் கீற்றில்
சற்றே துலக்கமுறுகிறது
அப்பாதை!
 
அது
எங்கோ செல்கிறது
தங்கள் கனவுகளை
நடவு செய்த பாதையை
தவறவிட்டவர்களின்
பாதையாக!
 
அவர்கள் நேசிக்கும்
இரவில் அச்சுறுத்தும்
கனவுகள் இல்லை!
அது இன்னும் புலரவில்லை!
 
நீள்கிறது இரவு
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமாக!


 
                                             *