சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘கடந்து கொண்டிருக்கும் தொலைவு’ என்ற கதையைப் பற்றி …/அழகியசிங்கர்

24.02.2023 அன்று வெள்ளிக்கிழமை இரண்டு கதைஞர்களைக் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித் இன்னொருவர் யாருக்கும் தெரியாத 80 வயது எழுத்தாளர் குமுதா ஸ்ரீநிவாசன்.
சுரேஷ்குமார இந்திரஜித் ஏற்கனவே விருட்சத்திற்கு அறிமுகமானவர்.  அவருடைய இரு கதைகள் விருட்சத்தில் வெளிவந்தவை மாபெரும் சூதாட்டம் என்ற புத்தகத்திலும் பதிவு செய்திருக்கிறார்.
அவருடைய கதைத் தொகுப்பிலிருந்து மூன்று கதைகளை எடுத்துப் பேசினோம்.  பொதுவாக இந்தக் கூட்டத்தின் நோக்கம்.  கதைஞர்களைப் போற்றுவது. உண்மையில் அப்படி நடப்பதில்லை.  
வித்தியாசமாகக் கதை எழுதக் கூடியவர் சுரேஷ்குமார இந்திரஜித்.  எப்போதும் நேர்கோட்டுப்  பாணியில் அவர் கதைகள் இருக்காது. 
அவருடைய கதைகள் எல்லாம் நான் லீனியர் கதைகள் அதாவது கட்டுப்பாடற்ற கதைகள். இப்படி தமிழில் சில எழுத்தாளர் இன்று எழுதிக்கொண்டு வருகிறார்கள். 
முதலில் கடந்து கொண்டிருக்கும் தொலைவு என்ற கதையைப் பார்ப்போம்.
இந்தக் கதையை நான் ஒருமுறைக்கு இருமுறை படித்தேன்.  இரண்டாவது முறை படிக்கும்போதுதான் எனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்கள் தீர்ந்தன.
இந்தக் கதை ஒரு மேஜிக் ரியலிஸக் கதை.  படிக்கும்போது சாதாரணமாக அப்படிப் படிப்பவருக்குத் தோன்றாது.  கதையே உண்மைபோல் சொல்லப்படுகிற பொய்.
கதையின் ஆரம்பத்தைப் பாருங்கள்.  அவன்  ஆபிசிற்குள்  நுழைந்ததும் அவனுக்கு இரண்டுமுறை போன் வந்ததாகவும், ஒரு பெண் பேசியதாகவும் பியூன் தெரிவித்தான்.
இருக்கையில் அமர்ந்தவுடன் அவனுக்கு மிருணாளினி ஞாபகம் வந்தது.  மனம் சஞ்சலப்பட்டது.  
போன் மாடியில் உள்ளது. போனை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.  
இந்தக் கதை மிருணாளினியைப் பற்றி கதையாக மாறுகிறது. 
மிருணாளினி விடிகாலையிலேயே வீட்டைவிட்டு கணவன் விரட்டி விட்டதாகவும் கையில் ரந்தீருடன் ஓர் ஏர்பேக்குடன் வெளியே வந்து, போக இடமில்லாமல் கோயிலுக்குச் சென்று பொழுதைக் கழித்துவிட்டு போன் செய்ததாகவும், இன்று ஆபிசிற்குச் செல்லவில்லை என்றும், உடனே அவன் வரவேண்டும் என்றும் அவள் கூறினாள். 
அவள் குறிப்பிட்ட இடத்தை அவன் போய்ப் பார்க்கிறான்.  இப்படி ஆரம்பிக்கிறது இந்தக் கதை.  இது நிஜமல்ல.  “
அவன் மாடியில் போய் போன் எடுப்பதற்குமுன் அவனுள்ள உருவான கற்பனைக் கதை. 
உண்மையில் போனை எடுப்பதற்குமுன், போனில் அவன் எதிர்பார்க்கிற மிருணாளிதான் பேசினாளா என்று தெரியாது.
படிக்கும்போது மிருணாளினி பற்றி கற்பனை என்பது மட்டும் தெரிகிறது.  உண்மையாக நடந்தது போல் நடை பெறுகிற சம்பவங்கள் நம்ப முடிகிற மாதிரி சொல்லப்படுகிறது. 
கடைசியில் இது ஒரு கற்பனை என்று உறுதிப்படுகிறது.  முடிக்கும்போது இப்படி எழுதியிருக்கிறார்.  
போன் வந்திருப்பதாக பியூன் சொல்லி  எழுந்தவர் போனை நோக்கி இன்னும் நடந்து கொண்டிருந்தான்.  தொலைவு கடக்க முடியாததுபோல நீண்டு கொண்டே இருந்தது. 
நடக்காத சம்பவத்தை நடப்பதுபோல் கற்பனை செய்யப்படுகிறது.  உண்மையில் இது ஒரு மேஜிக்கல் ரியலிஸக் கதை.