தமிழ் வளர்த்த சான்றோர் 64 வது நிகழ்வு!/ஜெ.பாஸ்கரன்

“இழந்த தமிழிசைக் கருவிகளின் மீட்பு – ‘யாழ்நூல்’ படைத்த விபுலாநந்த அடிகள்”.

கொரோனாவுக்கு முன், மாதாமாதம் நடைபெற்ற ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ நிகழ்ச்சி, மூன்று வருடங்களுக்குப் பின் 26.02.2023 அன்று ஆர் ஆர் சபா, மயிலையில் மீண்டும் உயிர்பெற்றது! பேராசிரியர் வ.வே.சு., ‘திராவிட மாயை’ சுப்பு, சாவித்திரி ஃபவுண்டேஷன் ஆடிட்டர் ஜெ.பாலசுப்ரமணியன் மூவரும் மீண்டும் இந்த இலக்கிய நிகழ்ச்சியைத் தொடங்கியது பாராட்டுக்குரியது. புதிய இடம், மூன்று வருட இடைவெளி இவற்றையெல்லாம் தாண்டி, இலக்கிய ஆர்வலர்களும், எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் என அரங்கு பாதிக்குமேல் நிறைந்திருந்தது மனதுக்கு நிறைவாய் இருந்தது! 100, 150, 200 என தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடைபெற வாழ்த்துகள்!

ஆர் ஆர் சபா செக்ரட்டரியின் வரவேற்புரை சற்று நீளமானதாக இருந்த போதிலும், தமிழ் இயல், இசை, நாடக வெளிகளில் சபாவின் பங்கு குறித்த முக்கியமான செய்திகள் சுவாரஸ்யமாகவே இருந்தன. தமிழ் வளர்த்த சான்றோர்களைப் பற்றிய இந்நிகழ்வுகளைப் புத்தகமாக வெளியிடுவது, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமையும்; அதற்குத் தன்னாலான உதவியைச் செய்யத் தயாராக இருப்பதாக ஆடிட்டர் ஜெ.பி. தன் சிற்றுரையில் தெரிவித்தார்.

வ.வே.சு. அவர்களுடன் விபுலாநந்த அடிகளைப் பற்றி – குறிப்பாக யாழ் நூலில் உள்ள சில பண்ணிசைகளைப் பற்றி – உரையாட இணைந்திருந்தவர் பிரபல கர்னாடக இசைப் பாடகர் முனைவர் காயத்ரி கிரீஷ் அவர்கள். இயலும் இசையும் சேர்ந்த சிறப்பான நிகழ்வாக பீனிக்ஸ் பறவை உயிர்த்தெழுந்தது போல அமைந்தது ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ 64 வது நிகழ்வு!

இனி விபுலாநந்த அடிகள் பற்றி நிகழ்வில் கேட்டவை:

1892 ஆம் ஆண்டு இலங்கையின் மட்டகளப்பு பகுதியில் மார்ச் 27 ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் ‘மயில்வாஹனன்’.

முதலில் தமிழும், சமஸ்கிருதமும் (வைத்தியலிங்க தேசிகரிடம்), பின்னர் ஆங்கிலமும் (குஞ்சுத் தம்பியிடம்) கற்றுக்கொள்கிறார்! இவை தவிர இலத்தீன், சிங்கள்ம், பாலி, வங்கம், அரபு என எட்டு மொழிகள் அறிந்தவர் விபுலாநந்த அடிகள். தமிழின் சிறப்பைப் போற்றுவதற்கு, சமஸ்கிருதம் போன்ற வேற்று மொழிகளையும் கற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான் பின்னர் இலங்கையில் இராமகிருஷ்ணா, சாரதா பள்ளிகளை (மொத்தம் 27) மடத்தின் மூலம் நிறுவும்போது, தமிழையும், சமஸ்கிருதத்தையும் சேர்த்தே, இலவசமாகப் பயிற்றுவிக்கச் செய்தார்!

ஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் படைப்புகள் பற்றி அவரது தந்தைமூலம் தெரிந்துகொள்கிறார். பின்னாளில் அவரது தமிழ் மற்றும் சமய நெறி சேவைகளுக்கு இதுவே ஆதாரமாகவும் அமைகின்றது. அவரது தந்தை எப்போதும் சொல்வது: “ஒன்றை முழுக்க படித்து முடித்துவிட்டு, அடுத்த புத்தகத்தைப் படி” – இன்று இது சாத்தியமா என்று தெரியவில்லை. ‘அகல உழுவதைவிட ஆழமாக உழுவது நல்லது’ என்ற முறையில் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகின்றது!

பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வம், ஷேக்ஸ்பியர் படைப்புகளில் ஈடுபாடு (‘செகப் பிரியர்’, ‘ஜெகத் சிற்பி’ என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்கிறார் அடிகள்) ஆகியவை, அவரைப் பின்னாளில் இசை நாடகங்கள் பற்றி அறிந்துகொள்ள உதவுகின்றன.

1922 ல், சென்னை (அப்போதைய மெட்ராஸ்) இராமகிருஷ்ணா மடத்துடன் இணைகிறார். ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம், வேதாந்த கேசரி போன்ற பத்திரிகைகளுக்கு ஆசிரியர் ஆகிறார். இந்த சமயத்தில்தான் தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. மூன்று நாட்களுக்கு, அடிகளாரின் சொற்பொழிவை அமர்ந்து கேட்கும் அளவிற்கு, உ.வே.சா. அவர்களுடன் ஆன தமிழ் இலக்கியத் தொடர்பு அமைந்திருந்தது!

1924 ல் சுவாமி சிவானந்தா, மயில்வாஹன சுவாமிகளுக்கு ‘சுவாமி விபுலாநந்தா’ எனப் பெயரிட்டு, இராமகிருஷ்ணா மடத்து சுவாமிஜியாக மாற்றுகிறார்.

1925 முதல் இலங்கையில் இந்துமத தத்துவங்களையும், இராமகிருஷ்ணா கல்விக் கூடங்கள் மூலம் கல்வியையும், இலக்கிய, சமய, தேசீய கருத்துக்களையும் பரப்புவதில் முழு முனைப்புடன் ஈடுபடுகின்றார்.

1931 ல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், தான் தொடங்கியுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு அழைக்கிறார். பல்கலைக் கழகத் துணை வேந்தரைவிடத் தமிழ்த்துறைத் தலைவருக்கு ‘ஒரு ரூபாயாவது’ அதிகம் சம்பளம் கொடுத்தால் வருவதாகச் சொல்கிறார். தமிழின் மீதான பற்று இப்படிக் கேட்க வைக்கிறது!

இந்த நேரத்தில் தான் ‘பண்டைய தமிழ் இசைக் கருவிகள்’ பற்றியும், ‘தமிழ்க் கலைகள்’ பற்றியும் பல ஆராய்ச்சிகள் செய்து, பழந்தமிழ் இசைக் கருவிகள் பற்றிய நூலைப் படைக்கிறார். “யாழ் நூல்” ஜூன் 1947 ல் வெளியிடப்படுகின்றது. திருக்கொளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயிலில், திருஞானசம்பந்தரின் சந்நிதியில் வெளியிடப்படுகின்றது. அப்போது, யாழ் போன்ற பண்டைய தமிழ் இசைக் கருவிகள் படங்களாகவும், மரத்தில் செய்யப்பட்ட இசைக்கருவிகளாகவும் உருப்பெறுகின்றன – செய்தவர், அன்றைய தந்தி இசைக்கருவிகளை சிறப்பாக இசைக்க வல்ல திரு கா.பொ. சிவானந்தம் பிள்ளை! இப்புத்தகம் குறித்த ஆய்வுரையை, சோமசுந்தர பாரதியார், சொ.முருகப்பா, தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சாம்பமூர்த்தி ஐயர், சுவாமிநாதப் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர் ஆகியோர் நிகழ்த்தினர். அப்போது சுவாமி விபுலாநந்தர், யாழ் பற்றிய அரிய தகவல்களை விளக்குகிறார்.

உடல் நலம் குன்றிய நிலையில், இலங்கைக்குச் செல்கிறார். 1947 ஜூலை 19 ஆம் நாள் மறைந்துவிடுகிறார். அவர் உருவாக்கிய மட்டகளப்பு சிவானந்த வித்யாலயதில் அடக்கம் செய்யப்படுகிறார். இவரது மறைவு நாள், ‘அகில இலங்கை தமிழ் மொழி தினம்’ ஆகக் கொண்டாடப் படுகிறது!

சிலப்பதிகாரம், தேவாரம், பெரியபுராணம் போன்ற இலக்கியங்களில் இருந்து அறிந்துகொண்ட செய்திகள் மற்றும் தன்னுடைய இசை ஞானம் கொண்டு, தமிழ் இசை, இசைக் கருவிகள் பற்றிய ஒரு சிறப்பான புத்தகமாக யாழ்நூல் விளங்குகின்றது. கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியீடாக வருகிறது. தமிழ்ப் பண் (ராகங்கள்), சந்தங்கள், மற்றும் சுவர பேதங்கள் என பல விபரங்களைக் கொண்ட அற்புதமான நூல் ‘யாழ்நூல்’. (மதங்க சூளாமணி, கட்டுரைத் தொகுப்புகள், விபுலாநந்தர் இலக்கியம்(தொகுப்பு), சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் – மொழிபெயர்ப்பு சுவாமி விபுலாநந்தா – ஆகியவை அடிகளாரின் மற்ற நூல்கள்).

பேரா. வ.வே.சு. அவர்களுடன் உரையாடிய காயத்ரி கிரீஷ், தன்னுடைய இசைப் புலமையாலும், இனிய குரலாலும் யாழ்நூல் பற்றிய ஒர் அருமையான பிம்பத்தைக் காட்டினார்.

முதல் பாடல் கம்பீர நாட்டையில் ஏழு சுவரங்களுக்கும் ஏழு தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் எனச் சொல்லி, ஒரு பாடலைப் பாடினார். மூத்த பிள்ளையார் (விநாயகர்), இளைய பிள்ளையார் (முருகன்) என சுவாரஸ்யமான விளக்கம் சொன்னார் வ.வே.சு. மேலும் தண்ணீரில் வெவ்வேறு வகை மீன்கள் கத்துவதை, யாழிசையுடன் ஒப்பிடுகிறார் அடிகளார் என்ற செய்தியையும் போகிற போக்கில் சொன்னார்.

“நீல வானிலே” பாடலை ‘ச ரி க ம’ ஆரம்பம், ‘ப த நி ச’ முடிவு என்ற அமைப்பில் உள்ளதைக் கூறி, கீரவாணி, மாயமாளவ கவுள, ஹரிகாம்போதி ஆகிய ராகங்களில் பாடினார் காயத்ரி – இந்த ராகங்களின் தமிழ்ப் பண்களின் பெயர்களையும் மறக்காமல் குறிப்பிட்டார்.

தேவாரத்தில் யாழ் பற்றிக் குறிப்பிட்டு, வாதி, சம்வாதி எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதை,மோகனத்தில் பாடிக் காண்பித்தார். தேவாரப் பண்களை அதே ராகத்தில், அதே சந்தங்களுடன் பாட வேண்டும் என்று கூறியவர், ஆரபியில் திருநாவுக்கரசர் தேவாரம் ஒன்றைப் பாடினார். ‘தலையே நீ வணங்காய்’ நாவுக்கரசரின் தேவாரத்தை பந்துவராளியில் பாடினார். க்ரக பேதம் பற்றிக் கூறியவர், ஹரிகாம்போதியின் ஸட்ஜமம், ரி, க, ம, ப, த, நி, என்ற நிலைகளில் மாறும்போது, எப்படி வேறு வேறு ராகங்களாகின்றன என்பதை காயத்ரி அவர்கள் பாடிக் காண்பித்தபோது, இவரது இசை ஞானதையும், குரல் வளத்தையும் அனுபவித்து வியப்பதா அல்லது யாழ்நூலின் சிறப்பை வியப்பதா என அரங்கம் குழம்பியது உண்மை!

ஈசன் உவக்கும் மலர் என விபுலாநந்தர் எழுதியுள்ள செய்யுளின் முதல் பகுதியை காயத்ரி பண்ணிசைத்துப் பாடியது சிறப்பு (சிவரஞ்சனி ராகம்).

“வெள்ளை நிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ,

வள்ள லடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?

வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.”

இனிமையான இசையுடன், தமிழ் இன்பம் பருகிய திருப்தியுடன் விழா நிறைவுக்கு வந்தது. எப்படியெல்லாம் தமிழை வளர்த்திருக்கிறார்கள்!