திருமதி குமுதா ஸ்ரீனிவாசனின் கடவுள் சித்தம் சிறுகதை/-ரேவதி பாலு

கதைஞர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில்

கடவுள் சித்தம் என்னும் வார்த்தை நாம் வீட்டுக்கு வீடு கேட்க கூடிய ஒரு வார்த்தை தான். பார்வதி சுந்தரம் தம்பதியினருக்கு மகேஷ் மாலினி என்று இரண்டு குழந்தைகள். மிகுந்த பாசத்தோடு அதே சமயத்தில் கண்டிப்போடும் சுந்தரம் குழந்தைகளை வளர்க்கிறார். மாலினி படித்து முடித்ததும் அவளை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து டெல்லியில் குடி வைக்கிறார். மகேஷ் கல்லூரி படிப்புக்கு பின்பு மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புகிறான். அதில் சுந்தரத்துக்கு எள்ளளவும் விருப்பமில்லை. ஆனால் மகனுக்காக பார்வதியும் சிபாரிசு செய்யவே ஒரு கண்டிஷனின் பெயரில் அதாவது படிப்பு முடிந்து உடனே இந்தியா திரும்பி விட வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார் . படிப்பு முடிந்ததும் மகேஷுக்கு அங்கே ஒரு நல்ல வேலை கிடைக்க ஒரு வருடம் வேலை பார்த்துவிட்டு வர தகப்பனாரின் அனுமதியை கோருகிறான். ஒரு வருடம் ஆகிவிட்டது அவன் திரும்பி வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது அவனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. தான் ஜூலி என்னும் பெண்ணை விரும்புவதாகவும் பெற்றோர் சம்மதத்துடன் அவளை மணம் முடிக்க விரும்புவதாக சொல்கிறான். சுந்தரம் அதிர்ந்து போகிறார். மகனுடன் உரையாடுவதையே நிறுத்திக் கொள்கிறார். பார்வதி தான் பாவம் மகனிடமும் அவ்வப்போது பேசி கணவரிடமும் பேசி ” இந்த காலத்துல எல்லா குழந்தைகளும் இப்படித்தானே இருக்கிறார்கள் “என்று அவரை சமாதானப்படுத்த முயல்கிறாள். காலம் ஓடுகிறது. மகேஷுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இன்னும் சுந்தரம் அவனிடம் கோபமாக தான் இருக்கிறார். பேச மறுக்கிறார்.

ஒருநாள் திடீரென்று சுந்திரத்திற்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட பார்வதி ஆஸ்பத்திரியில் சேர்க்கிறாள். உடனே மகேஷுக்கும்
மாலி னிக்கும் தொலைபேசி மூலம் அப்பாவின் உடல் நலம் பற்றி தெரிவிக்கிறாள். இருவரும் பதறி அடித்துக் கொண்டு உடனே கிளம்பி வருகிறார்கள். மாலினி டெல்லியில் இருந்து அன்று மாலையே வந்து விடுகிறாள். அப்பொழுது நல்ல நினைவுடன் இருக்கும் சுந்தரம் தன் மகளிடமும் மனைவியிடமும் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொள்கிறார். தான் இறந்தால் தன் அந்திம காரியங்களை தன் மாப்பிள்ளை தான் செய்ய வேண்டும் என்று. சற்று நேரத்தில் இறந்தும் விடுகிறார். மறுநாள் மகேஷ் வெளிநாட்டில் இருந்து வந்து விடுகிறான். மாலினி டெல்லிக்கு தொலைபேசி மூலம் தன் கணவரை தொடர்பு கொண்டு அவரை உடனே இங்கே வர சொல்கிறாள். தனக்கு கோவிட் பாசிட்டிவ் என்றும், தான் பயணிக்கக் கூடாது என்று டாக்டர் சொல்லி இருக்கிறார் என்றும் கணவரிடம் இருந்து பதில் வரவே மாலினி செய்வதறியாது குழப்பத்தில்
ஆழ்கிறாள். விஷயம் தெரிந்த பார்வதி மகேஷை விட்டு தந்தை யின் அந்திம காரியங்களை செய்ய முடிவு செய்கிறாள். ” எல்லாம் கடவுள் சித்தம்” என்று தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்று குழம்பிய மகளை சமாதானம் செய்கிறாள். தன் உள்மன ஆசையை நிறைவேற்றிய கடவுளுக்கு நன்றி கூறுகிறாள். அதே நேரத்தில் தன் மாப்பிள்ளை சீக்கிரம் குணமாகவும் கடவுளை பிரார்த்தனை செய்து கொள்கிறாள்.

மிக எளிமையாக எந்தவித சிக்கலும் இல்லாமல் நீரோட்டம் போல தெளிவாக சொல்லப்பட்ட கதை.