
உயிரியற்கை இசை. இசையால் இயங்குகிறது யாவும்! இசைக் கருவிகளை யார் வாசித்தாலும், பாடல்களை யார் பாடினாலும் ஒன்று தான், ஆனாலும், உணவின் சுவைக்கான கைப்பக்குவம் போலவே, ரசனை பொங்கும் இசைக்கான பக்குவம் இருக்கவே செய்கிறது. அது வாய்க்கப்பெறும் இசைக்கலைஞர்கள் கேட்போரை வேறு ஓர் உலகத்திற்கு அழைத்துச் சென்று வசப்படுத்தி விடுகின்றனர். உள்ளம் மூச்சுக் காற்றில் ஒட்டும், மூச்சுக் காற்று குழலில் ஒட்டும் என்று பாம்பு பிடாரன் பற்றிச் சொல்வாரே மகாகவி, அதன் அடுத்த கட்டம், அப்படியான இசை கேட்போர் உள்ளத்தில் போய் ஒட்டத் தானே செய்யும்! வாணி ஜெயராமின் குரல் உள்ளத்திலேயே தங்கி இருக்கிறது.
ஆர்ப்பாட்டமோ, அகந்தையோ அற்ற குழந்தைமை மின்னும் கண்கள் அவரது. தேனூற்று சுரந்து கொண்டிருந்தது அவரது குரலில். தூய்மையான அன்பில் நிலைத்திருந்தது அவரது இசை வாழ்க்கை. கற்பனையின் அடுக்குகளில் ஏற்ற இறக்கங்களோடு சுழன்று மிதக்கும் அற்புதமான பாடல்கள் வாய்த்தது அவருக்கு. அவர் வாய்த்தார் ரசிகர்களுக்கு!

தனக்குப் பெரும்புகழையும் அடுத்தடுத்த வாய்ப்புகளையும் பெற்றுத் தந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ (தீர்க்க சுமங்கலி) பாடலுக்காக அவர் இடையறாது நன்றி பாராட்டிக் கொண்டிருந்தார் மெல்லிசை மன்னருக்கு. அதற்குமுன் இரண்டு பாடல்கள் பாடி இருந்தாலும், எம் எஸ் வி அவர்களது இசையமைப்பில் விளைந்த இந்தப் பாடலே பரந்த வெளியில் அவரது முத்திரைப் பாடலாக எப்போதும் திகழ்கிறது. புல்லாங்குழலும், சுவாரசியமான தாளக்கட்டும் பிடித்து உலுக்க மல்லிகை பூக்கள் உதிர்ந்து மணம் வீசுகின்றன அவரது குரலினிமையில்! மல்லிகை என்ற ஒற்றைச் சொல்லை மட்டுமே மெல்லிசையில் எத்தனை விதமாக உச்சரித்து சிலிர்க்க வைத்தார் வாணி.
விதவிதமான பாடல்கள் நிறைந்திருக்கின்றன அவரது திரை இசைப் பேழையில். வேகம், சோகம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, உருக்கம், நெருக்கம்…. உணர்வுகளின் தெறிப்பும், உணர்ச்சிகளின் பிரதிபலிப்புமாக இருந்தன அவரது குரல் நாண்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இசை அமைப்பாளர்களது மேதைமையை நினைத்து சிலிர்த்துக் கண்ணீர் மல்க திளைக்கும் வரம் வாய்த்திருந்தது அவருக்கு. 19 மொழிகளில் பாடி இருக்கிறார், நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் சாதகம் செய்து வளர்த்திருக்கிறார். எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழிதான் அவரது தாய்மொழியோ என்று அந்தந்த மொழி பேசும் ரசிகர்கள் உணரும் வண்ணம் பாடும் திறன் பெற்றிருந்தார்.
பாரத ஸ்டேட் வங்கி ஊழியராக இருந்தவர், கணவர் ஜெயராம் பம்பாயில் பணியில் இருக்கவே அங்கு மாற்றலில் சென்றிருக்கிறார். மிகச் சிறந்த இசை ரசிகரான ஜெயராம், வாணியின் குரல் வளத்தை மிகக் குறுகிய காலத்தில் கேட்டுணர்ந்து, ‘நீ ஏன் இந்துஸ்தானி இசை கற்றுக் கொள்ளக்கூடாது?’ என்று வாணியின் இசையுலகின் முதல் வாசலைத் திறந்து கொடுத்திருக்கிறார். ஓர் இஸ்லாமிய இசை மேதையிடம், இராமர் மீதான தீட்சிதர் கிருதி ஒன்றைப் பாடவும், கண் மூடிக் கேட்ட உஸ்தாத் அப்துல் ரெஹ்மான் கான் அடுத்த நாளில் இருந்தே அவரது ஆசிரியராகிப் போனார். மட்டுமல்ல, வங்கி வேலை சங்கீத சாதகத்திற்கு சரிப்படாது, வெளியே வா என்று இசையின் பரந்த வெளியில் அவரைக் கொண்டு நிறுத்தவும் செய்துவிட்டார். வசந்த் தேசாய் தனது குட்டி படத்தில் வாணியைப் பாட வைத்தார்.
அவரது குரலினிமை, மிக இலகுவாக உச்ச ஸ்தாயியில் இசைக்கும் திறன், மொழியின் தூய உச்சரிப்பு, உணர்ச்சிகளுக்கேற்ற பாவம், லய ஞானம், சுருதி விலகாது ஒரு மூச்சில் பெரிய அடிகளைக் கூடப் பாடி முடிக்கும் வல்லமை எல்லாம் திரை இசை உலகில் வியப்போடு நோக்க வைத்தது. அதிக ஒத்திகை தேவைப்படாது, குறைந்த நேரத்தில் எதிர்பார்க்கப்பட்ட சங்கதிகளோடு மிகத் தேர்ச்சியாகப் பாடி முடிக்கும் அவரது ஆற்றல், ஒரே நாளில் பல மணி நேரம் வெவ்வேறு பாடல்களைப் பதிவு செய்து கொடுத்துவிட்டு வரும் பின்னணிப் பாடகியாக அவரை உயர்த்தியது.
தட்சிணாமூர்த்தி சுவாமிகள், கே வி மகாதேவன், வி குமார், சங்கர் கணேஷ், விஜய பாஸ்கர், சந்திரபோஸ்….என்று இசையமைப்பாளர்கள் பலருக்கும் திரைப்பாடல்கள் பாடியவர், மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் மீது அபார மரியாதை வைத்திருந்தார். ‘நீ ஏன் 25 ஆண்டு தாமதமாக இங்கே பாட வந்தாய்…’ என்று கேட்பாராம் எம் எஸ் வி. அவரது நுட்பமான இசையமைப்பு குறித்து நுணுக்கமாக மேடைகளில் கொண்டாடிப் பேசிக் கொண்டிருந்தார் வாணி.
அவரது இந்துஸ்தானி இசை பயிற்சி அதையொட்டி அமைக்கப்பட்ட பாடல்களை உயிர்ப்பாக இசைக்க வைத்தது. சங்கர் கணேஷ் இசையமைப்பில் பாலைவனச்சோலை படத்தில் இடம் பெற்று அவருக்குப் பெரும்புகழ் கிடைக்கச் செய்த ‘மேகமே மேகமே’ பாடல், பிரபல கஜல் பாடகர் ஜகஜித் சிங் அவர்களது ‘தும் நஹி கம் நஹி’ எனும் பாடலின் நேரடித் தழுவல். ‘தந்தியில்லா வீணை சுரம் தருமோ ..’ என்ற இடத்தில் அவர் ஸ்வரங்களை எடுப்பதும், ‘புயல் வரும் நேரத்தில் பூவுக்கு சுயம்வரமோ’ என்ற வரியை இசைப்பதும், ‘பாவையின் ராகம் சோகங்களோ…..’ என்று நீட்டித்து ஆலாபனை செய்யுமிடமும், ‘நீரலை போடும் கோலங்களோ’ என்று கொண்டு நிறுத்தும் இடமும் உள்ளத்தை நெகிழச் செய்து விடும். இரண்டாவது சரணத்தில், ‘தூரிகை எரிகின்ற போது …இந்த தாள்களில் ஏதும் எழுதாது..’ என்று அவர் பாடுகையில் கண்கள் நனைந்துவிடும். ‘தினம் கனவு எனதுணவு..நிலம் புதிது விதை பழுது’ என்ற தொடர்ச்சியும், ‘எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்’ என்று எடுத்து, நீ….வாங்க வேண்டும் என்று தொடுத்து, ‘அது எதற்கோ’ என்று சங்கதிகளோடு வளர்த்து உலுக்கிப் போடும் வண்ணம் நிறைவு செய்து பல்லவியைப் போய்ச் சேரும் தருணமும் ரசிகர்களை ஒரு பெருந்துயர உணர்வுகளுக்கு ஆட்படுத்தி விடும்.
இளையராஜா இசையமைப்பில் விளைந்த ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’ பாடலும் அப்படித்தான். விஸ்தாரமான ஆலாபனைகள், துல்லியமான சங்கதிகள், பிசிறின்றி உச்ச ஸ்தாயியில் இருந்து கீழ் தளத்தில் இறங்கி மீண்டும் மேல் வரிசைக்குச் செல்லும் இலகுவான அவரது பயணம் அந்தப் பாடலில் அத்தனை சுவாரசியமான அனுபவத்தைக் கொடுக்கும்.
அபூர்வ ராகங்கள் படத்தில் இடம் பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. அதே படத்தில் சசிரேகாவோடு இணைந்து அவர் பாடி இருந்த ‘கேள்வியின் நாயகனே’ பாடலிலும் அபார சங்கதிகளும், அமர்க்களமான ஏற்ற இறக்கங்களும் உண்டு. ‘என்னுள்ளம் அழகான வெள்ளித்திரை..’ (சினிமா பைத்தியம்), ‘மல்லிகை முல்லை பூப்பந்தல்’ (அன்பே ஆருயிரே), ‘நானா….பாடுவது நானா…’ (நூல்வேலி) என்று எம் எஸ் வி இசையில் மிகச் சிறப்பாக அமைந்த பாடல்களின் வரிசை நீண்டது. எம் எஸ் வி இசையில் அண்ணன் ஒரு கோயில் படத்தின் ‘குங்குமக் கோலங்கள் கோயில் கொண்டாட’ பாடலில் ததும்பும் சோக இழைகளும், துணிவே துணை படத்தின் ‘ஆகாயத்தில் தொட்டில் கட்டும் …’ பாடலின் அமானுஷ்ய மாய உணர்வலைகளும் அபாரமானவை.
டி எம் சவுந்திரராஜன் (அம்மானை – அவன் ஒரு சரித்திரம்), கே ஜே யேசுதாஸ் ( ‘தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்’ – மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்), எஸ் பி பாலசுப்பிரமணியன் (பாரதி கண்ணம்மா – நினைத்தாலே இனிக்கும்), ஜெயசந்திரன் (பூந்தென்றலே – புவனா ஒரு கேள்விக்குறி) என பல பாடகர்களோடு இணைந்து அவர் பாடிய பாடல்கள் யாவும் சிறப்பானவை. எஸ் பி பி – வாணி ஜெயராம் இணை குரல்களில் ‘நான் உன்ன நெனச்சேன்..’ என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது. பாலமுரளி கிருஷ்ணா அவர்களோடு நவரத்தினம் படத்திற்காக அவர் இசைத்த, ‘குருவிக்கார மச்சானே ….’ பாடல் இருவரும் சிறப்பாகப் பாடியது, சங்கதிகள் அத்தனை செம்மையாக ஒலிக்கும் வாணியின் குரலில்.
‘மதனோற்சவம்’ (சதுரங்கம்) பாடல் வி குமார் இசையமைப்பில் இனிமையான ஒன்று. விஜயபாஸ்கர் இசையில் அவர் பாடிய, ‘மணமகளே உன் மணவறைக் கோலம்’ (காலங்களில் அவள் வசந்தம்} ஒரு வித்தியாசமான ரசனையில் அமைக்கப்பட்டிருந்தது. இளையராஜா இசையில், வாணியே சொன்னது போல், குறைவாகப் பாடி இருந்தாலும், பாடும் வாய்ப்பு கிடைத்த அத்தனை பாடல்களும் மதுரமானவை. ‘நானே நானா…’, ‘என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்’, ‘ஒரே நாள் உனை நான்’ போன்ற பாடல்கள் சிறப்பானவை எனில், குரலில் ஒரு நர்த்தனம் செய்த ‘கவிதை கேளுங்கள்’ ஓர் அபார கீதம்.
மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சார பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழை ஒன்றை உருவாக்கிய போது, வெற்றி வளவன் எழுதிய இரண்டு முக்கிய பாடல்களை அவர் வந்து பாடிக்கொடுத்தார். தனியே அவர் பாடிய, ‘கண்ணீரில் கதறி அழுகிறாள் தள்ளாடும் அன்னை பாரதம்’ என்ற பாடலும் சரி, உதயபாண்டியோடு இணைந்து பாடிய ‘காலத்துக்கும் உழைச்சு உழைச்சுக் கண்டது என்ன மாமா’ என்ற பாடலும் சரி மிகவும் உயிர்ப்பானவை. எந்த எதிர்பார்ப்பும் இன்றி மிகவும் ஆர்வத்தோடு வந்து இசைத்துவிட்டுச் சென்றார் என்று தமுஎகச தோழர்கள் சொல்லக் கேட்டதுண்டு.
யார் மீதும் புகார் அற்ற இசை வாழ்க்கை அவரது. ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “எனக்கு யாரையும் வெறுக்கப் பிடிக்காது, ஒரே ஓர் இடத்தில் தான் வெறுப்பு என்று சொல்வேன், அது வெறுப்பு என்ற சொல்லின் மீது வெறுப்பு” என்கிறார். எந்த பேதங்களும் அவருக்கு இருந்தது இல்லை. இசையார்வமும் தனது நம்பிக்கை மீதான பற்றுதலுமே அவரது அடிப்படை வாழ்வியலாக அமைந்திருந்ததை உணர முடிகிறது. இந்துஸ்தானி சாயையில் அவரது அசாத்தியமான ராக ஆலாபனையும், தேனிசைக் குரலும், புன்னகை கமழும் அவரது துடிப்பான பேச்சும், சக கலைஞர்கள் பாடலாசிரியர்கள் படைப்பாளிகள் இசையமைப்பாளர்கள் இசைக்கருவி விற்பன்னர்கள் மீதான அவரது மதிப்பு மிக்க நேயமும் அவரைக் குறித்த சித்திரத்தை மேலும் உன்னதமாக்குகின்றன.
அவரது மறைவு பெருவருத்தத்தைத் தந்தது….. சில துயர வரிகள் மனத்தில் ஓடிக்கொண்டே இருக்கத்தான் செய்தன. காற்றில் இருந்து எடுத்துக் கொள்கிறது இசை. காற்று இசையாகத் தன்னை உருமாற்றிக் கொள்கிறது. இசை காற்றில் பரவுகிறது. இசையும் காற்றும் ஒன்றாகக் கலக்குமிடத்தில் வாணி வாழ்ந்து கொண்டே இருப்பார் என்று சமாதானப் படுத்திக் கொள்கிறது மனம்.

அருமை. தகவல் களஞ்சியம் அய்யா நீங்கள்.
Very Nice Sir
தூரிகை என்று படிக்கும் போதே வாணி அம்மாவின் உச்சஸ்தாயி குரல் காதில் கேட்கிறது.
பன்முக திறமை ஆற்றல் பெற்ற கலைவாணியின் நேர் வாரிசு
வானம்பாடி வாணி அம்மா
அஞ்சலி கட்டுரை அருமை!
மெல்லிய இசை உணர்வுகளை மீட்டி எடுத்து இனிய அனுபவங்களை தருகிறது எஸ்.வி.வியின் இந்தக் கட்டுரை! வாணி அம்மாவுக்கு சிறந்த அஞ்சலி!
மெல்லிய இசை உணர்வுகளை மீட்டி எடுத்து இனிய அனுபவங்களை தருகிறது எஸ்.வி.வியின் இந்தக் கட்டுரை! வாணி அம்மாவுக்கு சிறந்த அஞ்சலி!
இசைக் குயில் ஜானகி அம்மாவிற்கு மிகச் சிறந்த அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள். தோழர்.
மன்னிக்கவும். அவசரத்தில் பெயரைத் தவறுதலாக எழுதி இருக்கிறீர்கள்.
please tell me where
இசைக் குயில் வாணி ஜெயராம் அம்மாவிற்கு (ஜானகி அம்மாவிற்கு அல்ல) மிகச் சிறந்த அஞ்சல் செலுத்தியுள்ளீர்கள். தோழர்.
தவறுக்கு வருந்துகிறேன்.
ஜானகி அம்மாவிற்கு அல்ல அம்மாவுடன் என்று இருக்கலாம்.
Not discussed in detail about the song, “Nanae Nana Yaro thana… ” and Vairamuthu praised her in his article “Inda Kulathil Kal Erinthvargal” and her reaction to the same.
Mohaneaj