கம்பனைக் காண்போம்—71/வளவ. துரையன்


மாமன்னன் புறப்பாடு

காகளமும் பல்லியமும் கனைகடலின்
மேல்முழங்கக் கானம் பாட
மாகதர்கள் அருமறைநூல் வேதியர்கள்
வாழ்த்தெடுப்ப மதுரச் செவ்வாய்
தோகையர்பல் லாண்டிசைப்பக் கடல்தானை
புடைசூழச் சுடரோன் என்ன
ஏகிஅரு நெறிநீங்கி உரோமபாதன்
திருநாட்டை எதிர்ந்தான் அன்றே [237]

[காகளம்=ஒருவகை இசைக் கருவி, பல்லியம்=பலவகை இசைக்கருவிகள்; மாகதர்= அரசன் புகழ் பாடும் கட்டியங்காரர்கள்; தானை=சேனை;
இக்காலத்தில் ஓர் அமைச்சர் வருகிறார் என்றால் கணக்கற்ற மகிழுந்துகள் அவர் முன்னாலும், பின்னாலும் செல்வதைப் பார்க்கிறோம். அவரின் புகழ் பேசுபவர்கள் எல்லாரும் செல்கிறார்கள். இவர்களுக்கே இப்படி என்றால் தயரத சக்கரவர்த்தி கிளம்புகிறான் என்றால் எப்படி இருக்கும் என்பதைக் கம்பன் காட்டுகிறான். இருசியசிங்க முனிவனை அழைத்துவர தயரதன் உரோமபாத நாட்டிற்குக் கிளம்புகிறான்


காகளம் என்னும் இசைக் கருவியுடன் இன்னும் பல்வகைக் கருவிகளும் ஒலிக்கின்றன. அவற்றின் ஒலியானது கடல் ஓசையைவிட அதிகமாய் இருக்கிறது. மாகதர்கள் என்போர் அரசன் புகழைப் பாடுகின்றனர். அந்தணர்கள் வாழ்த்தொலி எழுப்புகின்றனர். இனிப்பான சிவந்த வாயினை உடைய மகளிர் பல்லாண்டு பாடுகின்றனர். கடல்போன்ற சேனை அவனைச் சூழ்ந்து வருகிறது. சுடர் வீசும் சூரியன் போல அவன் கடப்பதற்கு முடியாத வழிகளை எல்லாம் கடந்து உரோமபாதனின் அழகிய நாட்டை அடைந்தான்.
கம்பனின் வருணனை மன்னன் செல்லும் காட்சியை நம் கண்களில் கொண்டு வந்து நிறுத்துகிறது. ஒளிபொருந்தி இருப்பதாலும் விரைந்து செல்வதாலும் சூரியன் தயரதனுக்கு உவமையாகிறான்.