தாவோ கவிதைகள்/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

தாவோ கவிதைகள் -அடுத்த பத்து- பத்தில் ஒன்று ‘யாரோ’ எழுதிய பொக்கிஷம்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
1
உன் கதவுக்கு வெளியே போகாமல்
உன்னால் இந்த முழு உலகத்தையும் அறிய முடியும்
உன் ஜன்னலின் வழி பார்க்காமல்
சொர்க்கத்தின் தாவோவை நீ பார்க்க முடியும்

—லாவோ ட்சூ
———
2
ஒரு நூறு நீரோட்டங்களுக்கு கடல் ஏன் அரசன்?
ஏனெனில் கடல் அவற்றுக்குக் கீழே இருக்கிறது
ஆகையால் அது ஒரு நூறு நீரோட்டங்களுக்கு அரசன்
யோககுருவானவன் மக்களுக்கு வழிக்காட்டவேண்டுமென்றால்
அவன் தன்னடக்கத்துடன் சேவை செய்யவேண்டும்
அவன் தலைமை ஏற்று முன்னால் செல்ல வேண்டுமானால்
அவன் பிறரைப் பின்பற்றிச் செல்லவேண்டும்
——-
—- லாவோ ட்சூ
——-
3
சொற்களை மறந்துவிட்ட மனிதனை நான் எங்கே கண்டுபிடிக்க முடியும்?
நான் அவனோடு ஒரு சொல் பேச விரும்புகிறேன்
—-
சுவாங்க் ட்சூ
——
4
கோபமும் மகிழ்ச்சியும்
துன்பமும் இன்பமும்
பதற்றமும் நம்பிக்கையும்
சோம்பலும் மன ஊக்கமும்
உற்சாகமும் திமிரும்
-இன்மையிலிருந்து எழும் இசை போன்றவை
அல்லது இருளில் முளைவிடும் காளான்கள் போன்றவை
அவை நம்முள் இரவும் பகலும் தோன்றுகின்றன
——
சுவாங்க் ட்சூ
——-
5
சகதித் தண்ணீர் அமைதியுறுகையில்
யார் அசைவற்று இருக்க முடியும்?
செயலுக்கான நேரம் வரும் வரை
யார் அசைவற்று இருக்க முடியும்?

லாவோ ட்சூ
——
6
சன்னியாச நிலையைக் கைவிடு
ஞானத்தைத் துறந்துவிடு
மக்கள் நூறு மடங்கு பயன்பெறுவார்கள்
—-
லாவோ ட்சூ
—-
7
ஒளியைப் பயன்படுத்தி
ஒளிக்குத் திரும்பு
அதன் பிறகு நீ
இறந்து போகலாம் என்றாலும்
நிரந்தரமாய் வாழ்வாய்
—-
லாவோ ட்சூ

8
வார்த்தைகளில் வடிக்கப்படும் தாவோ
உண்மையான நிரந்தரமான
தாவோ அல்ல
——
யாரோ
——
9
பிரபஞ்சத்திலேயே மிகவும் மென்மையான பொருள்
பிரபஞ்சத்திலேயே மிகவும் கடினமான பொருளைத்
தோற்கடித்துவிடுகிறது
—-
லாவோ ட்சூ

10
மலைகளின் மேலிருக்கும் மரங்கள்
கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தப்படுகின்றன
எனவே வெட்டப்படுகின்றன
கொழுப்பு நெருப்போடு சேர்க்கப்படும்போது
அது தன்னைத் தானே தின்றுவிடுகிறது
இலவங்கத்தை சாப்பிடலாம் அதனால்
அது அறுவடை செய்யப்படுகிறது
அரக்கு மரத்தைப் பயன்படுத்தலாம்
ஆகையால் வெட்டி வீழ்த்தப்படுகிறது
எல்லோருக்கும் பயனுள்ளவற்றின்
பயன் என்ன என்று தெரியும்
ஆனால் யாருக்குமே
பயனற்றதன் பயன் என்ன
என்று தெரியாது
—-
சுவாங்க் ட்சூ
——