
உளிக்கு மொழியையும்
பேனாவிற்கு நாவும்
படைத்தவன் எவனோ?
கற்பித்தவனே கலைஞன்!
சிற்பியின் உளியும்
சிந்தனையாளனின்
எழுதுகோலும்
கற்பனைகளைக்
கலை வண்ணமாக்கும்
கூர்முனை கொண்டவை தான்!
தேவையற்ற பகுதிகளைச்
சிதைக்கத் தெரிந்த இவர்கள்,
தேவையானவற்றை மட்டும்
செதுக்கி வைப்பது தான் அழகு!
படைக்கத் தெரிந்த பிரம்மனின்
படைப்பிற்கும் மரணமுண்டு!
செதுக்கத் தெரிந்த சிற்பியின்
படைப்பிற்கு மரணம் ஏது?
அதனால் தான் இறைவன்
சிற்பியின் கரங்களால் தன்
படைப்பை ஏற்கிறான்! – பாவம்…
அவன் மனிதர்களால் அன்றோ
அவ்வப்போது சிதைக்கப்படுகிறான்!
