சிலை/ ஆர் வத்ஸலா

பேருந்து பயணத்தின்
ஓட்டுநர்
கருணையுடன்
இடைவேளை வழங்க

கால் உதறி
சொல்லாமல்
காசு கொடுத்து
மூக்கை மூடி
ஓரம் ஒதுங்கி

ஓட்டுநர் நடத்துநர்
கைகாசு வாங்கி
கை நீட்டிய
உணவகத்தில்
சிற்றுண்டி உண்டு
தேநீர் அருந்தி
வெளியில் வருகையில்
கவனித்தேன்

உணவகத்தின் தன்மையை
விளக்கும் வகையில்
அதன்
ஒரு பக்கம் மருந்து கடையும்
மறு பக்கம்
ஒரு பண்டைய காலத்து
சிதைந்த சிலையும்

இன்று
உணவகத்தின் கருணையால்
கவனம் பெற்று
மஞ்சள் குங்குமம் நிறைய சம்பாதித்து
அமர்ந்திருந்தது அது

எந்த சாமி என்று சட்டென்று தெரியவில்லை
சிதைந்த முகத்தைப் பார்த்து
‘ஆஞ்சநேயா’ என இஷ்ட தெய்வத்தை அழைத்து கும்பிட்டேன்
பக்கத்தில் இருந்தவர்
சிறு நகையுடன்
‘அது பெருமாள்’ என்றார்

எதுவாய் இருந்தாலும்
அடுத்த ஒரு மணி பயணத்தில் நடக்கவிருக்கும்
பேருந்து விபத்தில்
நான் பிழைப்பேனா என்று
தெரிந்திருக்கும் அதற்கு