
ஒருகாலத்தில் தானியங்கள் சேமித்து வைக்கப்படும் பொது மையமாகக் கோவில்கள் இருந்திருக்கலாம். இல்லை, பெரிய மதிள்களைக் கொண்ட அவை, எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அரண்களாகப் பயன்பட்டனவா?
அசோகனின் மகன் மகேந்திரனும் அவன் சகோதரியும் தமிழகத்தில் வந்திறங்கிய இடமென்று சொல்லப்படும் கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்துக்கு அருகிலிருக்கும் மகேந்திரபள்ளிக்கு அருகில் ஆச்சாள்புரம் கோவிலும், காஞ்சியின் வரதராஜப் பெருமாள் கோவிலும் நமக்குத் தெரிந்து ஆங்கிலேயர்களால், (ராபர்ட் கிளைவ்?) இவ்வாறு பயன்பட்டன. மாலிக்காபூர் படையெடுப்பின் போது அரங்கன் கோவில் அவர்களுக்கு எதிரான அரணாக எப்படிப் பயன்பட்டது என்பதை ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா விளக்குகிறது.
ஈராயிரம் ஆண்டு ராஜ பரம்பரை வரலாற்றைக் கொண்ட தமிழகத்தில் கோட்டைகள் ஒன்றிரண்டுதான் உள்ளன!! அதுவும் வந்தவர்கள் கட்டியது.
இன்றைக்குத் தமிழகத்தில் பெரும்பான்மை கோவில்களில் மதியம் சந்நியாசிகளும் ஏழைகளும் மதியம் உணவு சாப்பிட முடிகிறது. கோவிலின் பணமா, அரசுப் பணமோ, அல்லது புரவலர்கள் அளிக்கும் நன்கொடையோ காரியம் நடக்கிறது. கேரளா தெரியவில்லை. ஆனால், கர்நாடகாவில் பல கோவில்களில் அன்னதானம் கட்டாயம் உண்டு.
சாமானிய மக்களுக்குத் தினசரி உணவளிக்கும் செயலை நிறைவேற்றத்தான் கோவில்களில் மடப்பள்ளிகள் இருந்தனவா? மழை வெள்ளம் புயல் போன்ற நெருக்கடிகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் வழிபாட்டுத் தலங்களைப் பெரிதாகக் கட்டினார்களா? மாயவரம் ஏர், மதுரை மல்லி, தஞ்சாவூர் கதம்பம் என்பதுபோல், மணப்பாறை முறுக்கும், பேரளம் வடையும், சேலம் மாம்பழமும், திருநெல்வேலி அல்வாவும் என்பதுபோல் நெல்லை சொதி, சிதம்பரம் கொத்சு, ஆடுதுறை பூரிக்கிழங்கும் பிரசித்தமானவைதாம்.
இந்தப் பூர்வாங்கத்துடன் நான் தெரிந்து கொள்ள விரும்பிய மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், இறைத்தலங்களில், குறிப்பிட்ட மரங்கள் தல விருட்சங்களாக இருப்பது. தமிழர்கள் மருதம், ஆல், அரசு வேம்பு, வில்வம், கடம்பம் எனப் பல்வேறு விதமான மரங்களை அந்தத் தலத்திற்கென பிரத்தியேகமாக வளர்த்திருக்கிறார்கள். வணங்கியிருக்கிறார்கள். அதுபோல் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பிரசாதம் செய்து இறைவனுக்குப் படைத்து அவனை மகிழ்வித்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் கோவிலுக்குள் இருக்கும் மடப்பள்ளிகளில்தான் பிரசாதம் செய்யப்படுகிறது. இவற்றை எந்த அடிப்படையில் இந்தக் கோவிலுக்கு இது என்று முடிவு செய்தனர்? யார்? இது ஓர் ஆர்வமூட்டும் கேள்வி/ செய்தி.
அது சரி, கோவில்களில் பிரசாதம் வழங்கும் பழக்கம் என்று தொடங்கியது? அது ஒரு சம்பிரதாயமா? இறைவனுக்கு நிவேதனம் செய்ததைப் பக்தர்களுக்கு விநியோகிப்பது என்பது போன்ற ஒரு நடைமுறையா? அல்லது ஏழைகளுக்கும், அன்றாடம் காய்ச்சிகளுக்கும் அன்ன தானமா?
தமிழகத்தில் சிவன் கோவில் உண்டைக் கட்டி பட்டை சாதம் ரொம்பப் பிரசித்தம். பெருஞ்சேரி என்கிற பிருஹத்ரேணிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் வாகிஸ்வர சுவாமி கோவிலில் உண்டைக் கட்டி நன்றாகவே ருசிக்கும். புளியோதரையும் தயிர் சாதமும். கோவிலுக்கு நேர் பின்னால் அம்மாவின் அம்மா வீடு!. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விநியோகம் பிரசித்திப் பெற்றது. குடந்தை உப்பிலியப்பன் கோவிலில் ஸ்வாமிக்கு உப்பில்லாமல்தான் படையல். பழநியில் பஞ்சாமிர்தம், ஐய்யப்பன் கோவிலில் அரவண பாயசம், சிங்கப் பெருமாள்கோவிலில் மிளகு தோசை. பாமரர்களும் சாமானியர்களும் வணங்கும் மக்கள் தெய்வம் அம்மனுக்குக் கூழ். அப்புறம் அழகர் கோவிலில் ஒருவிதத் தோசை, திருவாரூரில் நெய்முறுக்கு, அப்பக் குடத்தானுக்கு அப்பம், ஆவுடையார் கோவிலில் புழுங்கலரிசிச் சோறும் பாகற்காய் கறியுமாம். குற்றால நாதருக்குச் சுக்குக் கஷாயம். இவற்றிற்கு பின்னால் ஒரு தொன்மம், ஒரு கதை நிச்சயம் இருக்கும்.
சென்னைக்கு மாற்றலில் வந்தபிறகு முதன் முறையாகக் காஞ்சிபுரம் சென்றேன். இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால். ஏதோ சங்கத்தின் மாநாடு. மாயவரம் காளியாகுடி போன்று அந்த ஊரில் பிரபலமான ஒரு பழைய ஹோட்டல். நண்பர், காஞ்சிபுரம் இட்லி சாப்பிடலாமா? இந்த ஊர் விசேஷம் என்றார். தட்டு இட்லி, ரவா இட்லி கேள்விப்பட்டிருக்கிறேன். தட்டு இட்லி நண்பன் மறைந்த ராதாகிருஷ்ணனின் அம்மா செய்து தருவார். தொடுகறியாக, அதன் கூட கொத்சு போன்ற கொஞ்சம் கெட்டியான சாம்பார் சாப்பிட்டுமிருக்கிறேன். இது இங்கே ஃபேமஸ் போலும் என்று, சரி என்றேன். தாளிக்கப்பட்ட மாவில் செய்தது போன்ற இட்லி. சுவை பரவாயில்லை.
அதன்பின் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் காஞ்சி வரதனுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம் என்று அறிந்தேன். அதுபோல் திருவள்ளூர் வீரராகவ கோவிலிலும் இட்லிதானாம். திருப்பதி திருவரங்கத்திற்கு அடுத்துப் புகழ்பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வைணவத் தலம் காஞ்சி வரதராஜ பெருமாள்.
வல்லபாச்சாரியார் என்ற கிருஷ்ணப் பக்தர் முதன் முதலில் இந்த இட்லியைத் தயாரித்து, படைத்து வழிபட்டதாகக் கூறுகிறார்கள். காலை நேரத்தில் இரண்டு இட்லி தயாரித்து. வரதனுக்கு ’அம்சேயம்’ செய்கிறார்கள். உபயதாரருக்கும், பணியாளர்களுக்கும் அதில் பங்கு உண்டு. பக்தர்களுக்கு விநியோகம், திருப்பதி லட்டுபோல், கிடையாது!
நாம் சாப்பிடும் இட்லிபோன்ற சைஸ் கிடையாது. சுமார் முழங்கை அளவு நீளமும், பால் கறக்கும் ஜோடுதால் வாயளவு அகலமும் இருக்கும். ஒரு இட்லியை நல்லா சாப்பிடறவங்க குறைந்தபட்சம் நாலு பேர் சாப்பிடலாம்.
’ உலகிலேயே பெரிய இட்லி இதுதான் கோவில் இட்லி என்றும் குடலை இட்லி என்றும் அழைக்கப்படுகிறது. பச்சரிசி, உளுந்து வெந்தயம். 3 மணி ஊர வைக்கணும். ரவை பதத்துக்கு அரைத்து புளிக்க வைக்கணும். மிளகு, சீரகம், பெருங்காயம், சுக்குத் தூள், கறிவேப்பிலை எண்ணெய். சிறந்த சாய்ஸ் கடலை எண்ணெய். ஜோடுதால் போன்ற உயரமான மூங்கில் குடலையில் அடியில் வாழை இலை, வைத்து, உள்புறம் மந்தார இலை. மாவு ஊற்றப்பட்டு வேக வைக்கப்படுகிறது. மந்தார இலை உடலுக்கு நல்லது என்பதுடன் நோக்கத்திற்கும் உதவும். விவரமான செய்முறை கூகுள் தேடலில் கிடைக்கிறது. கொடிய விஷத்தையே முறிக்கும் சக்தி கொண்டது என்பதால் மருந்துப் பொருட்களான சுக்கும் மிளகும் சேர்க்கப்படுகின்றன.
‘இந்த இட்லியை அவிக்கும் பானை, வழக்கமானதைக் காட்டிலும் உயரமாக, பிரத்தியேகமானதாக இடுப்பில் சற்று வளைந்ததுபோல் இருக்கிறது. கோவில் தவிர்த்து பாரம்பரியமாக இந்த இட்லியைத் தயாரித்து விற்பவர்கள் அந்தக் காலத்துப் பித்தளைப் பானையைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆவி இட்லிக்குள் இறங்காமல் இருக்க வாழை இலை கொண்டு மூடிவைத்து, ஒரு மணி நேரத்திற்கு வேக வைக்க வேண்டும். இட்லியை இறக்கி, தட்டில் கொட்டி, அழகான துண்டுகளாக, வட்டமான குல்பி ஐஸ்க்ரீமை துண்டு போடுவது போல் போட்டு, பரிமாறுகிறார்கள்.
‘தொடுகறி உங்கள் வசதி. இரண்டு நாளைக்கு வைத்துச் சாப்பிட்டாலும் கெட்டுப் போகாது. அழுத்தி மூடிவைக்காமல் சற்று காற்றோட்டமான பாத்திரத்தில் வைக்க வேண்டும்.’
மேலோட்டமான தகவல் உதவி மனைவியின் தோழி பெருமாள் பக்தையான திருமதி அனிமா பிச்சுமணி. அடுத்த முறை காஞ்சி சென்றால், நிச்சயம் மீண்டும் கோவில் இட்லி சாப்பிட வேண்டும்.
Sandhya Pathippagam, Nagarajan Kb
