03.03.2022
துளி 265

வருடா வருடம் சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற ஊர்களிலும் புத்தகக் காட்சி நடத்தலாம் என்ற எண்ணம் என்னுள் ஒவ்வொரு ஆண்டும் உதித்த வண்ணம் இருக்கும்.
இந்த முறை அதற்கு ஒரு விடிவு கிடைத்து விட்டது. திருநெல்வேலியில் முதன் முறையாக விருட்சம் அரங்கத்தை ஏற்பாடு செய்தேன்.

திருநெல்வேலிக்கு நாங்கள் நால்வர் பயணம் செய்தோம். ஏற்கனவே ஏற்பாடு செய்த நண்பர் ஒருவர் புத்தக அரங்கைச் சிறப்பான முறையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நான் திருநெல்வேலிக்குக் கிளம்புவதற்கு முன் எனக்கு ஒரு கனவு தோன்றியது. . அந்தக் கனவு திகைப்பை உண்டாக்கியது.
6.1.1997ல் மறைந்த பிரமிள் என் கனவில் வந்தார். 26 ஆண்டுகளுக்குப் பிறகு என் கனவில் ஏன் தோன்றினார் என்பது புரியவில்லை.
கனவில் ஏதோ சொல்வது போல் தோன்றியது. நான் யோசித்துக்கொண்டே இருந்தேன். திருநெல்வேலியில் திருப்பணிகரிசல குளம் என்ற இடத்தில் திருமால் நகரில் பிரமிள் நூலகத்தைப் பார்த்துவிட்டு வரும்படி பிரமிள் குறிப்பால் சூட்சும வடிவத்தில் உணர்த்தினாரா என்று தோன்றியது.
திருநெல்வேலியில்தான் பிரமிள் நூலகம் இருக்கிறது என்று எனக்கு முதலில் தெரியவில்லை.
தற்செயலாக கால சுப்பிரமணியனிடம் பேசும்போதுதான் எனக்குத் தெரிந்தது. நூலகத்தைச் சிறப்பான முறையில் கட்டிய ரமேஷ் ராஜாவின் தொலைப்பேசி எண்ணைத் தந்து உதவியவர் குட்டி ரேவதி. . அவர் ரியல் எஸ்டேட் அதிபர். பலருக்கு குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தருகிறார். திருநெல்வேலியில் முக்கிய பிரமுகர். இலக்கிய ரசனை உள்ளவர்.
ரமேஷ் ராஜாவைப் புத்தகக் காட்சியில் 28.01.2023 அன் இரவு 7.30 மணிக்குச் சந்தித்தேன். உடனே பிரமிள் நூலகத்திற்குப் போக வேண்டுமென்று என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.
அவருடைய காரை ஏற்பாடு செய்து நூலகத்தைப் பார்க்க ஏற்பாடு செய்தார். என் கூடவே நண்பர் கிருபானந்தனையும் அழைத்துக் கொண்டு சென்றேன்.
நூலகத்தைப் பார்த்தவுடன் எனக்குப் பிடித்துப் போயிற்று. பல குடியிருப்பு நடுவில் அமைதியான முறையில் பிரமிள் நூலகம் இருந்தது.
பிரமிள் வாழ்நாள் முழுவதும் சரியான குடியிருப்புகளில் வாழவில்லை. அயோத்தியா குப்பத்தில் அவர் இருந்த இடத்தில் படுத்து உறங்கத்தான் அறை இருக்கும். அவர் விருப்பமில்லாமல் அங்கு இருந்தார். மழைக் காலத்தில் அந்த இடம் ரொம்ப மோசமாகப் போய்விடும்.
ஆனால் திருமால் நகரில் தாராளமான இடத்தில் அவர் நூலகம் அமைந்து விட்டது. நூலகத்தில் நுழைந்தபோது பிரமிள் வசிப்பிடமாகத்தான் நூலகம் எனக்குக் காட்சி அளித்தது.
அந்தக் கட்டடத்தில் பிரமிள் ஓவியங்கள், புகைப்படங்கள் அவர் எழுதிய புத்தகங்கள் என்று இருந்தன.
தன்னை அடையாளம் காட்ட பிரமிள்தான் சூட்சும உருவத்தில் கனவில் எனக்கு அந்த இடத்தைச் சுட்டிக் காட்டினாரோ என்று தோன்றியது.
பிரமிள் பெயரில் திருமால் நகரில் நூலகம் நடத்தி வரும் ரமேஷ் ராஜாவின் பங்கு முக்கியமானது.
அங்குப் போய் நான் எடுத்த சில புகைப்படங்கள் இங்குப் பகிர்ந்து கொள்கிறேன்.
நூலகத்தின் முகவாயில் சுவரில் எழுதப்பட்ட பிரமிள் கவிதை இதோ :
மீனுக்குத் தண்ணீர்
மிருகத்துக்கு
பிராண வாயு
மனிதாத்மாவுக்கோ
மனம்தான் வெளி....
\
