எமனுடன் கொஞ்சம் பேச்சு வார்த்தை/ஆர் வத்ஸலா

(3-3-23-இல் விருட்சம் இணைய வழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை)

எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது
இன்றிரவு நீ வருவாய் என
கொஞ்சம் பொறுக்க முடியுமா அப்பா?
நீ புன்னகை செய்கிறாய்
நான் எல்லாரிடமும்
சாவுக்கு பயப்படவில்லை என்று
எப்போதும் சொல்வதை நினைத்து தானே?
நான் கேட்பது
என்னை விட்டு விடு என்றல்ல
சாகும் வயதுதான்
என்னுடையது
அதிலும் நான் தினமும் வேண்டியபடியே
அநாயாச மரணம்
நன்றியப்பா
நான் கேட்பதெல்லாம்
அரை மணி அவகாசம்
நான் மன்னிக்க வேண்டியவர்
யாரேனும் இருந்தால்
அவரை மன்னிக்கவும்

நான் யாரிடமாவது மன்னிப்பு கேட்க
வேண்டியது இருந்தால்
அவர்களிடம் மானசீகமாக
மன்னிப்பு கேட்கவும்

பிறகு சமையல் வாயு ஸிலிண்டரை
கீழே மூடவும்
வெளியே சென்றுள்ளவர்கள்
வாசற்கதவை உடைக்காமல் நுழைய
சௌகரியமாக
தாழ்ப்பாளை திறந்து வைக்கவும்