
(3-3-23-இல் விருட்சம் இணைய வழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை)
அரை இட்லி
கால் இட்லி
ஒரு விள்ளல்.
எது கொடுத்தாலும்
ஒரே எதிர்வினைதான்.
அவள் அம்மாவின் கையைத் தள்ளி,
வலது தோள் உயர்த்தி,
இடப்புறம் தலை சாய்த்து,
பிடிவாதம்,செல்லம்,சிணுங்கல்
சரிவரக் கலந்த குரலில்
“மாட்டேன் போ!!!”.
என் மகள் சொன்னபின்
அவளுக்கு மட்டுமென
தோசை வார்க்கப்படும்.
பின்னாளில்,
செல்லம்,சிணுங்கல் மாற்று
குறைந்தாலும்,
"போ” என்பது
“போப்பா, போம்மா, போடா” என
மாறினாலும்,
அவள் பிடிவாதம் உச்சியிலும்,
நாங்கள் இறங்கி வருவதும்
தொடர்ந்தபடியே.
கையில் இணைத்த குழாய்.,
முகம் மூடிய கவசம்,
தீவிர சிகிச்சைப் பிரிவில்
கண் திறவாமல் படுத்திருக்கும்
மகளைப் பார்க்கிறேன்,
பிடிவாதமாய்க் காலனையும்
“மாட்டேன் போ!!” எனச் சொல்லி
எழுந்து வருவாளெனும்
நம்பிக்கையோடு,
கண்களில் நீர்வழிய.

ஆஹா அட்டகாசமான உள்ளார்ந்த பாசக் கவிதை