எல்லாம் மனிதர்கள்/அழகியசிங்கர்

மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து
நீங்கள் பஸ் ஸ்டான்ட் வரை
வருகிறீர்களென்று வைத்துக்கொள்ளுங்கள்
காவேரி நகர் ஒட்டினாற்போல்
உள்ள அந்தப் பிரதான சாலையில்
காலை வைக்கிறீர்கள்
தெரியும் உங்கள் முக சுளிப்பிலிருந்து
மேடும் பள்ளமுமாய் அந்தத் தெரு
பார்க்கக் கண்ணீர் வடிக்க
எல்லாம் உங்கள் கண்ணுக்குப்
புலப்படுகிறது. அந்தத் தெருவில் வருபவர்
காலை சேற்றில் விட்டுவிடுகிறார்
அப்போதுதான் முதன் முறையாக
உங்கள் காதுக்கு எட்டும்படி அவர்
முணுமுணுக்கிறார்..
‘மணிசங்கர் அய்யரிடம் சொல்லணும்’
நான் சிரித்தபடி அவரிடம் சொல்கிறேன்
‘மணிசங்கர் அய்யர்’ தில்லியில்
சொகுசுக் காரில் உலா வந்துகொண்டிருப்பார்.
உங்கள் குரல் எடுபடாது.’
இந்த ஊர் எம்எல்ஏ
யாரென்று எனக்குத் தெரியாது?
எங்கே இருப்பாரென்றும் தெரியாது?
இந்தத் தெருவைச் சரிசெய்யும்
அதிகாரிகள் எங்கே போனார்கள்?
அதிகாரமும் பதவியும் இருந்தும் என்ன?
பாவம். யாரால்தான் என்ன செய்ய
முடியும்? எல்லோரும் மனிதர்கள்.
ஆனால் இந்தத் தெருவில் தினமும்
அவதியுடன் நடந்துபோகும் மனிதர்களை
பற்றி நினைத்துப் பார்த்தீர்களா?
வண்டிகளை எந்த
முணுமுணுப்புமின்றி ஓட்டிச்செல்லும்
வாகன ஓட்டிகளைப் பற்றிக் கூறுங்கள்
முதுகில் பாடப்புத்தகங்களைப்
பொதி மாதிரி சுமக்கும் சிறார்களை
பற்றிச் சொல்லுங்கள். தட்டுத் தடுமாறி
நடந்துவரும் கூன் விழுந்த
வயதானவர்களைப் பற்றியும் தெரிவியுங்கள்
சொல்கிறேன். உண்மையில்
இவர்களெல்லாம் மகான்கள் மனிதர்களல்ல

(3-3-23-இல் விருட்சம் இணைய வழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை)