
நிஜம்
நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமே நிஜமோ நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்
……………..
இந்தக் கவிதையை இன்னும் கொஞ்சம் விரிவாக வாசித்தால் இப்படி வரும்:
உண்மை எனும் உண்மையை உண்மையாக சொல்லவந்தது
உண்மையாக உண்மை எனும் உண்மையைச் சொல்வதில்
உண்மையை உண்மையாக சொல்லும் உண்மை மீது கவனம் வைக்க
உண்மையே உண்மையோ எனக் கேட்கும் உண்மை
எல்லா உண்மையும் உண்மையாக
உண்மையோ உண்மையே எனச் சொல்லும் உண்மை
உண்மை உண்மை உண்மை , உண்மை தவிர வேறொன்றும் இல்லை
இது ஒரு க்யுபிசக் கவிதை போல் இருக்கிறது. க்யுபிசம் இருபதாம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமான உத்தியாக ஓவியத்தில் கையாளப்பட்டது. பின் அது இலக்கியத்திலும் இசையிலும் எடுத்தாளப்பட்டது. இந்தக் கவிதை அது போன்ற உத்தியிலிருந்து உருவாக்கப்பட்டது போல் இருக்கிறது. ஓரே ஒரு சொல் பல்வேறு வினைகளைச் செய்வதாக உள்ளது கவிதையில். இயல்பான ஒன்றைச் சிதைத்து பல வடிவங்களில் காட்டுவது க்யுபிசத்தின் சிறப்பம்சமாக உள்ளது. அது போல் ஒற்றைச் சொல்லின் பல வடிவங்களை, பல பரிமாணங்களை இந்தக் கவிதையில் காண முடிகிறது. மேலும் அந்தச் சொல்லின் காட்சி வடிவம் ஒரு சதுரம் போல் தெரிகிறது.
நிஜம் என்பதற்கு உண்மை, மெய்மை, சத்தியம் என்ற பல பொருள்கள் உள்ளன. நிஜம் குறித்து ஏன் இத்தனை வகையில் விளக்கங்கள் தேவைப்படுகின்றன என்றால் நிஜம் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. நிஜமா? நிஜம்தானே? நிஜத்தில் நடந்ததா? இப்படிப் பல. அது மட்டுமல்லாமல் உண்மை குறித்த சிக்கல் அதாவது crisis படைப்பாளர்களிடமிருந்துதான் வெளிப்படும். உண்மையற்ற போலியான பொய்யான புரட்டான ஒன்றைக் குறித்து படைப்பு மனம் எழுதாது. உண்மை மறைந்திருப்பதாகவும் பொய்மை புறத்தில் இருப்பதாகவும் கருதும் படைக்கும் மனம் உண்மையின் வெளிப்பாட்டிற்காக எழுத்தில் எழுச்சியுறும். அத்தகைய எழுச்சிதான் இந்தக் கவிதை.
ஒரு நிரந்தரமான உண்மை அல்லது நிஜம் என்பது இல்லை. மேலும் ஒரு காலகட்டத்தின் நிஜமும் உறுதியானதில்லை. பின் ஏன் நிஜத்தைக் குறித்து இத்தனை விளக்கங்கள் தேவைப்பட்டன என்றால் எல்லா காலகட்டத்திலும் ஏதோ ஓர் உண்மை குறித்த அலசலும் தேடலும் இருந்துகொண்டே இருக்கிறது.
காலத்தில் உறையும் உண்மை என்பதில்லை. அதனால் உண்மையை எப்படியாவது கைக்கொண்டுவிட மனிதமனம் ஆட்படுகிறது. கவிதை மனம் பதறுகிறது. அந்தப் பதற்றத்தின் விளைவுதான் இந்தக் கவிதை. ஏதோ ஒரு நிஜம். எல்லோருக்குமானதாகவும் தனிப்பட்டவருக்கானதாகவும் உள்ளது. அந்த நிஜத்தை நிஜமாக வெளிப்படுத்துகிறது இந்தக் கவிதை.
அறிவியலில் சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்று நம்பப்பட்டது நிஜமாக ஒரு காலத்தில் இருந்தது. பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று அறியப்பட்டவுடன் புதிய உண்மை பிறந்தது. அந்தந்த காலகட்டத்தின் உண்மையின் பொருள் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் எல்லா காலத்திற்குமான ஓர் உண்மை இருக்கிறது என்பதையும் அதற்கான தேடலையும் இந்தக் கவிதை சாத்தியப்படுத்துகிறது.
19ஆம் நூற்றாண்டில் உண்மை அல்லது நிஜம் என்பது ஆதாரத்தை ஒத்து முன்வைக்கப்படுவதாகும். ஆதாரத்தை நம்பி முன்வைக்கப்படும் எதுவும் உண்மையாகும். அதன் பின் ஒரு முழுமையின் சாராம்சத்தை ஒத்திருப்பதாக உண்மை கருதப்பட்டது. பல நம்பிக்கைகளின் அமைப்பில் இருக்கும் நம்பிக்கை மட்டுமே உண்மை எனக் கருதப்பட்டது. அதன் பின் உண்மைக்கு அப்பால் எதுவும் இல்லை என நம்பப்பட்டது. பண்பு சார்ந்த தன்மைகள் மட்டுமே உண்மைகள் என நம்பப்பட்ட காலகட்டம் இருந்தது.
நடப்பியல் கோட்பாடு வந்த போது இயல் உலகில் காணுவதை எழுதுவது உண்மை எனக் கருதப்பட்டது. அதன் பின் உண்மை என்ற சொல்லே இடுகுறித் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மொழி சார்ந்த கோட்பாட்டில் உண்மை என்பது பொருள்கோள் சார்ந்ததாக மாறியது. உண்மை என்பது உறுதிப்பாடு என்று பின்னர் கருதபட்டது. நடப்பில் இருக்கும் நிஜம் என்பதை விட மெய்நிகராக உலவும் நிஜம், அதன் விளைவுகள் என்பதைத்தான் தத்துவவியலாளர் ஜைல்ஸ் டெல்யூஜ் விளக்குகிறார்.
அத்தகைய ஒரு நடப்பில் இருக்கும் இயல்பான உண்மை என்பதை விட நனவுநிலையில் பதிந்திருக்கும் நிஜத்தை உறுதி கூற வந்திருக்கிறது இந்தக் கவிதை. நடப்பில் இருக்கும் நிஜம் எல்லை வகுத்தது. மெய்நிகராகப் பரவும் நிஜம் எல்லையற்றது. அதன் வலிமைதான் அதன் பண்பு. அத்தகைய ஒரு நிஜத்தை இந்தக் கவிதை வலியுறுத்துகிறது.
பொய்மையை, பாசாங்கை, கள்ளத்தை முற்றிலும் எதிர்த்து உருவானது. அல்லது அவற்றுக்கு நேர்மாறானது. எது நிஜம் என்பதையும் அதன் மூலம் அதன் வலிமையையும் இந்தக் கவிதை அடித்துச் சொல்கிறது. உண்மைக்குப் புறம்பான, மெய்மை அற்ற, அசத்தியமான எதுவும் நிஜமல்ல. நிஜம் மட்டுமே நிஜம். அது எந்த நிஜமாகவும் இருக்கலாம்.
அறிவியல், ஞானம், தத்துவம் என்ற எந்தக் கோட்பாட்டின் மூலம் தருவித்துக் கொண்டதாகவும் இருக்கலாம். பளிங்கு போன்ற தூய்மையுடன் நிஜமாக கவிதைக்குள்ளிருந்து இந்த நிஜம் துலக்கமாக விளக்கப்பட்டுவிட்டது.
