சரிதான்/
ஆர் வத்ஸலா

மகளிர் தினக் கவிதை👇

ஒப்புக்கொள்கிறோம்
நாங்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் தான்
தொலைக்காட்சி செய்தி வாசிப்பவளின்
புடவை சரிகையின் அகலத்தை அளப்பவர்கள்தான்

கண்ணீரும்
தலையணை மந்திரமுமே
எங்கள் பிரம்மாஸ்திரங்கள்

அடுத்தபடியாக
நான் சொல்லப் போவதை நீங்கள் நிச்சயம்
கொட்டை எழுத்தில் அச்சிடுவீர்கள்
அல்லது
உரக்க படிப்பீர்கள்
நாங்களே எங்கள் எதிரிகள்
ஆம் அறிவாளிகளே!
நாங்களே எங்கள் எதிரிகள்

நீங்கள் மகிழ்வுடன் கூறும்
இக்குற்றங்கள் அனைத்தையும்
நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்

சமைத்து
துவைத்து
தேய்த்து
சீக்காளிகளை பராமரித்து
குழவிகளைப் பேணி
ட்யூஷன் சொல்லி
எஞ்சிய நேரத்தில்
நாங்கள் குதிரைதான் ஓட்டுகிறோம்

செய்தித்தாள் வாசிப்பதை விட
அது விழுமிடத்தில் கோலமிட்டு
மங்களம் காத்தலே
எங்கள் கடமையாகிப்
போன நிலையில்
செய்திகளை விட புடவைகள் தான்
எங்கள் மூளையைத் தொடுகின்றன

“கவிஞர் கூற்றை நம்பி நிமிர்ந்து நின்று விடாதே
ஆணவக்காரி என முத்திரை குத்தப்படுவாய்”
என்கிற அறிவுரைகளை கேட்டு
சுய மதிப்பை தொலைத்து
எங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஆயுதங்களை
நாங்கள் பிரயோகிக்கத்தான் செய்கிறோம்

“தனித்தன்மையுடையவளா!
ஐயோ!
அபாயம் அதெல்லாம்!
வீடு திரும்பும்போது சூடான அடை காப்பி நீட்டும் ரகம்தான்
எனது தேவை”
என்பவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள்
மூளையை சலவைக்குப் போட்டுவிட்டு
கிடைக்கும் நேரத்தில்
வம்பு வளர்க்கத்தான் செய்கிறோம்
“வீட்டுத் தலைவனுக்கு அடங்கிய பிரஜைகள் நீங்கள்”
என்றெழுதிப் போன
மகானுபாவன் மனுவின் மந்திரத்தில்
கட்டுண்டு
ஆணரசனின் கடாட்சத்திற்க்கு
போட்டியிடும்
ஆண்டைகளாகிய
நாங்களே
எங்கள் எதிரிகள்