தூக்கம்/ ஆர் வத்ஸலா

தோழி வந்தாள்
கழுத்தில் எட்டு பவுன்
தங்க முறுக்கு சங்கிலியின் ஒரு பவுன் தாலி மேல்
இன்று ஏறிய மஞ்சள் கயிற்றுடன்
காரடையுடன்
எனக்குப் பிடிக்கும் என்று
தெரியும் அவளுக்கு

சிரமத்துடன் என் கழுத்தை
பார்ப்பதை தவிர்த்தாள்

மிக நன்றாக இருந்தது
அடை
வெண்ணெயுடன்

எனக்கு காரடை செய்ய வராது
தாலி அணிய பிடிக்காது

அவள் இருக்கையில்
என் கணவரும் சாப்பிட்டு
சிலாகித்தார்
அவள் போன பின்
பரிதாபப் பட்டார்
நீயாவது சொல்லக் கூடாதா
அந்த குடியனை விடச் சொல்லி?
இன்றைக்கும் அவள் கழுத்தில் காயம் கவனித்தாய் அல்லவா?

என்ன செய்ய முடியும்
விழிக்க விரும்பாதவளை ?

15/3/23