
17.00.20_24
சாண் பிள்ளையாதலால்
பாட்டி வீட்டில் தங்கி
புகழ் பெற்ற
சென்னை பள்ளிக்கூடத்தில்
அண்ணன்
பெண் குழந்தை
என்பதால்
பெற்றோரிடம் தங்கி
அப்பா பணி செய்த சிற்றூரிலிருந்த
ஒரே ஒரு பள்ளிக்கூடத்தில்
நான்
கோடை விடுமுறையில் அண்ணனின்
தாற்காலிக வீடு திரும்பல் கொண்டாடப்படும்
எங்கள் வீட்டில்
விமரிசையாக
சாப்பிட
அண்ணன் இல்லையே என்று புலம்பிக்கொண்டே அம்மா
பண்டிகை நாட்களில் மட்டுமே
கணக்காக செய்யும் லட்டுவும் கை முறுக்கும்
டப்பாக்களில் நிறைந்திருக்கும்
இரண்டு மாதமும்
சிக்கனம் கருதி
பத்து மாதங்கள்
வாங்கப் படாத
பிஸ்கோத்துகளும்
சாக்லேட்டுகளும்
தீரத் தீர வாங்கப்படும்
எல்லோருக்காகவும்
“சளி பிடிக்கும்” எனக் கூறி ஒதுக்கப்படும்
தள்ளு வண்டியில் வரும் நாலணா “ரீடா” ஐஸ்கிரீமும்
வாங்கித் தரப்படும்
அண்ணன் ஆசை படும் போதெல்லாம்
எனக்கும்
விடுமுறை முடிந்து அண்ணன் கிளம்புகையில் அம்மா அழுவாள்
பெருங் குரலில்
கூடவே நானும்
சற்று
அண்ணனுக்காகவும்
