கவிதை நேசிப்பு மெய்நிகர்க் கூடுகை 99

வான்வழிப் பயணம் திண்டு
மெத்தை சவுகரியம்
மாநாடு நடத்திச்
சொல்மாரி பொழியும் மனிதருண்டு
எகானமி வகுப்பில்
விமானப் பயணம்
பல்லியாய் ஒட்டிக்கொள்வாய் நீ.
தொடர் வண்டிப் பயணத்தில்
குளுகுளு முதல் வகுப்பில்
கால் நீட்டிப்படுத்துறங்கும் மனிதனோடு
சட்டைப்பையில் டிக்கட்டோடு
பொதுப் பெட்டி கக்கூசில் பயணிக்கும்
மனிதருண்டு.
அய்ந்து நட்சத்திர லீலா பேலஸில்
மூவாயிரம் கொடுத்து டின்னர் முடித்து
வீதிக்கு வருவாய் நீ.
தெருமுனையில் தட்டை நீட்டிக்கொண்டு
தம்பியும் தங்கையுமாய்.
கச்சி ஏகம்பர் கோவிலுக்குப்போயேன்
ஏகம் பரநாதர் மாவடிக்காமாட்சி
திவ்ய தேசத்து
நிலாத்துண்டப் பெருமாள்
மூன்று சந்நிதிகளில் கூட்டம்.
கும்மி இருட்டில்
முந்நூறு சாமி சிலைகள் கரப்பான்கள்
அணிவகுக்க
நிர்வாணமாய் வவ்வால் புழுக்கை வாசம்.
ஏழைச்சோமேசன்
ஏழைமாரி ஏழைவிநாயகர் எல்லாம்தான்.
கடவுளே ஆனாலும்பொய்க்காது வள்ளுவம்
பொருளில்லார்க்கு இல்லையே இவ்வுலகம்.
