
(சிவாயநம. இன்று விருட்சம் நிகழ்வில் வாசித்த என் கவிதை )
நீ,நீதான், நிலையிதுதான்! நிறுத்தற் புள்ளி.
நீயிதனை அரைப்புள்ளி ஆக்கு வாயோ?
நீ,நீயாய் நகர்வதிலே நிலைக்கும் காப்பு;
நீ,நினையே மீறிவிடின் நிலையென் னாகும்?
நீ,நீதான் என்பதுவோ நிறுத்துப் பார்த்து
நின்னெல்லை வரையறுத்த நிலையாம்! இந்த
நீ,நீயாய் இரு!யெல்லாம் வழக்கம் போல
நிகழும்!உனை நீயேற்று நடத்து வாழ்க்கை!
நீயுன்னை அறிவதனால் நிறுத்தற் புள்ளி
நகருமெனில் நினக்குள்ளே நகர்த்திக் கொள்நீ!
நீயுன்னுள் வேறுதிறன் கிடத்தற் காணின்
நின்வேலி அப்புறத்தே நீரூற்றிக் கொள்!
நீயுன்னிப் பார்ப்பதனால் வேலிக் கப்பால்
நிகழுமொன்றை வேலிக்குள் நிகழ்த்தல் ஆகா!
நீயிங்கே நீநீதான்; நீதான்! வேறு
நிலையேதும் இலையுனக்கு; நினைவில் கொள்நீ!
நீபரந்த வெளியினிலே விரியப் பார்த்தால்
நின்னெல்லைக் காப்பழியும்; நன்மை யாகா!
நீபுரந்த திறனெல்லாம் நின்னின் வேறாய்
நிற்கட்டும்; நின்வேலிக் குள்ளே வேண்டாம்!
நீபிறந்த பிறவியிது; மாற்று வேண்டின்
நடக்குமோ?சொல்! நிலைமாற்றும் எண்ணம் மாற்று!
நீ,நீதான்! நிலையிதுதான். நிறுத்தற் புள்ளி.
நீவைத்தால் காற்புள்ளி நிற்கு மாமோ?!
*** *** ** **
