இழப்புகள்/ ஆர் வத்ஸலா

நானும் அண்ணனும்
பிள்ளை பருவத்தில்
மும்பையின்
குட்டிக் குடியிருப்பு பால்கனியில் வரும்
சிட்டுக்குருவிகளை
விரட்டும் தொடர் விளையாட்டில் மகிழ்வோம்
எங்கள் சத்தம் தாங்காது
அம்மா சத்தம் போடும் வரை

பிறகு அண்ணன் நற்கல்விக்காக
சென்னையில்

நான் பாதுகாப்பாய்‌
பெற்றோருடன்
வடக்கே
ஒரு சிற்றூரில்
தனியாக சிட்டுக்களுடன்
ஓடி விளையாடிக் கொண்டு
சற்றே குறைந்த உற்சாகத்துடன்

எனதென்று நம்பி
குடி புகுந்த
வீட்டில்
திருமணம் சார்ந்த
சினிமாத்தனமான
கனவுகள் உடையும் தருணம்
துன்பத்தின் இடைவெளிகளில்
தில்லி குருவிகள்
கூடு கட்டிய அழகை
ரசித்துக் கொண்டு

அவனது மட்டுமேயான வீட்டை விட்டு
வெளியேறும் சமயம்
கலையப் போகும்
இரு கூடுகளுக்காகவும்
வடித்தக் கண்ணீரில் –
இன்னும சில துளிகள் சேர்ந்திருக்கும்
கூடுதலாக –

இனி நான் காணவே போவதில்லை
குருவிகளையும்
என அறிந்திருந்தால்