பறக்கத் தெரிந்த குருவி/இலத்தூர் கி.சங்கர நாராயணன்.

சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
சிறகு முளைத்ததா?-கூடு
கட்டி முடிக்க சுள்ளி தழை உனக்குக் கிடைத்ததா?

நெட்டி முறித்து நீவி
நன்கு பறக்கத் தெரியுமா?
சுட்டிக் கழுகு துரத்தி வந்தால்
எதிர்க்கத் தெரியுமா?

விட்டம் விட்டு வானவட்டம்
போடத் தெரியுமா?
முட்டி மோதும் மலையைக் கண்டால்
விலகத் தெரியுமா?

வெட்டிவீழ்த்த
வேடன் வந்தால்
விரையத் தெரியுமா?
சிட்டுக் குருவி
நீ வாழும் உலகம் புரியுமா?

சிறுகுருவிச் சந்ததியை
சிதைத்துவிட்ட மனித இனக்
குறு மனத்தை
அறிவாயோ?
கொந்தளிக்க
மாட்டாயோ?

ஒரு நாளை உனக்களித்து
கொண்டாட்டம்
தெரிவாயோ?
சிறு பறவை நீ
வாழ்ந்தால்
இவ்வுலகம் தாங்காதோ?

குருவிகளைப் பாதுகாக்கும்
நாடிருந்தால்
தேடிச் செல்!
வருநாளில்
என்னை அங்கு
அழைப்பாயோ
சொல்!