கோ.முத்துசுவாமியின் ஏழு என்பா கவிதைகள்

1.

விடியல் மழையில் கதிரவன் நனைந்தான்;
மேகக் குடையில் மறைந்து கொண்டான்
மழையை வீசினான் பேப்பர் பையன்
நனைந்தே வந்தது நாளேடு.

2.

“விருட்சம்” ஏட்டில் இடத்தைப் பிடிக்க
வெறிச்சோடாமல் பெய்தது மழை;
என்பா வகையில் மழைப்பனித் துண்டுகள்;
நனைந்தே வந்தது நாளேடு!

  1. மூடிய சாளரக் கதவை முட்டி
    மோதிப் பெய்தது காலையில் மழை;
    அலாரம் வேலை இழந்ததாய் அலுத்தது;
    நனைந்தே வந்தது நாளேடு!

4.

விடியல் மழையில் கதிரவன் நனைந்தான்;
மேகக் குடையில் மறைந்து கொண்டான்
நனைந்து வீசினான் பேப்பர் பையன்
நனைந்தே வந்தது நாளேடு.

5.

உக்ரைனில் விடாத போர்ஒரு செய்தி
அடுக்ககம் ஒன்றில் பிடித்த தீ ஒருசெய்தி
வானம் பொத்து வடிந்த மழையில்
நனைந்தே வந்தது நாளேடு

6.

வத்சலா அம்மையார் விட மாட்டார்
அழகிய சிங்கர் மாட்டிக் கொள்வார்
எண்ணிப் பார்த்துப் பெய்த மழையில்
நனைந்தே வந்தது நாளேடு

7.

நாலுநாள் முன்பே நான்போட்ட என்பாக்கள்
“விருட்சத்தில் ” இன்னும் பூக்க வில்லையே!
‘என்பா ‘வில் குறையுண்டோ? அழகிய சிங்கரே!
அன்பாலே யோசித்துப் பாரும்.