——-

மானிடவியலாளர் மார்கரெட் மீட்டின் (Margaret Mead) வகுப்பில் மாணவி ஒருவர், களப்பணிக்காகச் செல்லும்போது ஒரு சிறிய சமூகம் நாகரிகமடைந்த சமூகம் என்பதற்கான அறிகுறி என்ன என்று எப்படிக் கண்டுகொள்வீர்கள் என்று கேட்டாராம். வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையில் இருக்கும் சிறிய சமூகமாக இருக்குமென்றால் அதில் யாரேனும் தொடை எலும்பு முறிந்து காயம் ஆறி இயல்பு நிலைக்குத் திரும்பி இருப்பவர் தென்பட்டால் உடனடியாக இது மிகவும் நாகரிகமடைந்த சமூகம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். ஏனென்றால் மிருகங்களின் உலகில்
கால் எலும்பு முறிந்துவிட்டால் அந்த மிருகம் சாவதைத் தவிர வேறு வழியில்லை. வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையில் இருக்கும் ஒரு சமூகத்தில் ஒருவருக்கு கால் எலும்பு முறிந்து குணமாகியிருக்கிறதென்றால் அவரைப் பார்த்துக்கொள்ள வேறு யாரோ இருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படி பலகீனர்கள், தடுக்கி விழுந்துவிட்டவர்கள் ஆகியோரைப் பாதுகாக்கிற சமூகமே, ஒருவருக்கொருவர் நிற்கிற சமூகமே, நாகரிகமடைந்த சமூகம் அதற்கான அறிகுறிகள் பலவகைப்பட்டவையாக இருக்கும் என அதற்கு மார்கரெட் மீட் பதிலளித்தாராம். இந்த உயர்கல்விப்புலக் கதை உண்மையில் நடந்ததா என்று எனக்குத் தெரியாது. ஆனால் பண்பாடுகள் எப்படி மதிப்பிடப்படுகின்றன என்பதைச் சொல்வதற்கான நல்லதொரு கதை.
பாஷோவின் கவிதைகளில் உழைப்புப் பாடல்களை நாகரிகத்தின், கலையின், தோற்றுவாயாகக் கருதும் பார்வை பல இடங்களில் காணப்படுகிறது. இந்த விஷயத்தைப் பற்றிய பாஷோவின் வெளிப்படையான கவிதை ஒன்று:
கலையின் பிறப்பு
நாற்று நடுபவர்களின் பாடல்
எங்கிருந்தின்னாதபடி வரும் சேர்ந்திசை
பாஷோவின் ஆன்மிகத்தில் கனிந்த பார்வை பல சமயங்களில் இயற்கையின் பேரழகு ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு வசப்படுவதை கவனப்படுத்துவதாக இருக்கிறது. அவருடைய இன்னொரு வெளிப்படையான கவிதை;
ஏழ்மையின் குழந்தை
அவன் அரிசியை மாவாட்டுகிறான்
நிலவை உற்று நோக்குகிறான்
நிலவு பார்த்தல், செர்ரி பூத்திரள்களைக் காணுதல், காற்றில் அசையும் புற்களைக் கவனித்தல் என பல அழகியல் அனுபவங்கள் ஏழ்மையில் இருப்போருக்கே, நாடோடிகளாய் அலைவோருக்கே, ஏதிலிகளுக்கே பாஷோவின் கவிதைகளில் சாத்தியமாகின்றன. இதனால் பாஷோவின் கனிந்த ஆன்மிக அழகியல் சமூகத்தின் பலவீனர்களின் பொருட்டான அரசியலாகிறது. பாஷோவின் கவிதைகளில் ஆன்மிக அழகியல் அரசியலை வாசிக்க நாம் பின் வரும் கவிதையில் வரும் சிறுமி போல சற்றே ஒருக்களிக்க வேண்டும்.
அரிசியைப் புடைத்தவாறே
சிறுமி ஒருக்களிக்கிறாள்
நிலவைக் காண

All reactions:
4You, Veli Rangarajan and 2 others
