பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்/ தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
இந்தப் பகிர்வோடு பாஷோவின் ஹைக்கூக் கவிதைகள் மொழிபெயர்ப்பு நிறைவு பெற்றுவிட்டது. நேற்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது கால் சுளுக்கு குணமாகிவிட்டது பாஷோ மொழிபெயர்ப்பு முடிந்துவிட்டது இன்னும் கைச்சுளுக்கு சரியாகவில்லை பெசோவா, தாவோ தெ ஜிங் மொழிபெயர்ப்புகள் பாக்கியிருக்கின்றன என்று சொன்னேன்.
இன்னும் சில குறிப்புகள் எழுத வேண்டும். ஹைக்கூ, ஹொக்கு என்ற பெயர்கள் பற்றி, தமிழில் ஹைக்கூ கவிதைகளின் மொழிபெயர்ப்பு வரலாறு பற்றி, அப்புறம் துக்க நிவாரணம், வலி உணர்தல் ஆகியன பற்றி பாஷோவின் கவிதைகள் என்ன சொல்கின்றன என்பது பற்றி.
இந்தக் கவிதைகளோடு பகிர்ந்திருக்கும் யோஷிட்டோஷியின் மரச்செதுக்கு ஓவியத்தில் கைத்தடியோடு நிற்பவர் பாஷோ. ஓவியத்தின் தலைப்பு, “ பிறை நிலவு நாளிலிருந்து இந்த இரவுக்காகக் காத்திருந்தேன்”. ஓவியத்தில் பாஷோ இலையுதிர்கால முழு நிலவு நாளைக் கொண்டாடும் எளிய விவசாயிகளோடு சேர்ந்துகொள்கிறார்.
இன்று மூன்றாம் பிறை. சந்திர தரிசனத்திற்கான நாளாக மரபாக பல்வேறு பண்பாடுகளில் அடையாளப்படுத்தப்படுவது.
———-
241

மீன் கடை-
நன்னீர் மீன்களின்
உப்பிட்ட உதடுகள்- எவ்வளவு குளிர்ந்திருக்கின்றன!

242

கவிதையில் பைத்தியமாய்
காற்றில் அலைக்கழியும் சிக்குசாய் நகரம்
போல நடக்கிறேன்

243

ஒடுக்கமான பள்ளத்தாக்கின் மேல் பாலம்
படர்தாமரை பின்னிய
உடலும் ஆத்மாவும்- ஒன்று

244

பனி மலர்களில் மூழ்கிய
தெய்வீகக் கோப்பையில்
குற்றம் ஏதுமில்லை

245

தெற்கத்திய பள்ளத்தாக்கு
காற்று
பனியின் வாசனையைக் கொண்டு வருகிறது

246

இனிமையான வெண் சிவப்பு
மலர்ச்செடியின் இதயத்திலிருந்து
ஒரு குடிகாரத் தேனீ

247

பசுந்தாவரங்களையும் அரிசியையும்
வண்டியேற்றிச் செல்லும் பசு-
யாருடைய மணமகள் நீ?

248

நகர வியாபாரிகள்-
யார் வாங்குவார்கள்
பனி அரக்கிய இந்தத் தொப்பியை?

249

சேர்ந்து நாம்
கோதுமைக் கோதுகளை சாப்பிடலாம்
புற் தலையணையைப் பகிர்ந்து கொள்ளலாம்

250

பனித்துளிகள்-
உலகின் தூசை
இன்னும் சிறப்பாக எப்படிக் கழுவுவது?

251

கல்லறையே,
இலையுதிர்கால காற்றுக்கு வளைந்து கொடு-
நான் விம்மி அழுகிறேன்

252

கோடைகாலப் புற்கள்
சிப்பாய்களின் கனவுகளில்
எஞ்சியவை

253

பயணத்தில் நோய்மை
உலர்ந்த வயல்களின் மேல்
கனவுகள் அலைவுறுகின்றன

254

ஓஹ் எனக்கு ஒன்றுமே நடந்திருக்கவில்லை!
நேற்று கடந்து சென்றுவிட்டது
ஃபுகு சூப்

——-