
பேடையும் சேவலுமாய்
முற்றத்துள் பறந்துவந்த
சிட்டுக் குருவிகள்! – தம்
குச்சிக் கால்களால்
கொடிக்கயிற்றைப்
பற்றிக் கொண்டு சற்று
ஊஞ்சலாடின!
கருமணி அழகுக்
கண்களை உருட்டி,
மல்லியளவு அலகு திறந்து
முத்தமிட்டு உரசி,
அங்குமிங்கும் நோக்கி
கீச்சொலித்தன.
தண்ணீருடன் இருந்த
மண்குவளையின்
விளிம்பைப் பற்றி,
துளிநீரை உறிஞ்சி எடுத்து
அலகை உயர்த்தி அருந்தி
தாகம் தணித்தன!
அந்தரத்தில் தொங்கும்
தீனிக் கூண்டிலிருந்து,
ஆளரவமில்லா நேரம் பார்த்து
சில தானியங்களைக்
கொத்தி உண்ணும் வேளையில்,
விட்டத்தில் கட்டியிருந்த அவற்றின்
கூட்டிலிருந்த குஞ்சுகள்,
தாய்க்குருவியின் வருகை உணர்ந்து
கூக்குரலால் கூவி அழைத்தன!
‘கீச்’சொலியுடன்
சிறகடித்துச் சென்று
கூட்டினுள் அமர்ந்த
பேடைச்சிட்டு – தன்
அலகில் கவ்வியிருந்த உணவை
சிவந்த வாய்திறந்த
குஞ்சுகளுக்கு ஊட்டிய போது,
‘சட்’டென்று பறந்து வந்த
சேவற்சிட்டு
சற்றும் எதிர்பாராமல்,
விட்டத்தில் சுழன்ற – மின்
விசிறியில் அடிபட்டு – தரையில்
‘பொத்’தென்று விழுந்தபோதே
உயிரற்றுப்போனது!
அந்நேரம் பார்த்து
முற்றத்தில் பாய்ந்த
பந்தைப் பிடிக்கவந்த
சிறுமி “அம்மா…குருவி..!” என்று
தன் மழலைக் குரலில்,
அவள் அம்மாவை அழைக்க…
கூட்டிலிருந்த அம்மா குருவியோ
எந்தச் சலனமும் இன்றி
குஞ்சுகளுக்கு
இரையூட்டிக் கொண்டிருந்தது!
- கு.மா.பா.திருநாவுக்கரசு
நாள்: 23/3/2023
