அப்பா தி.க.சி/வண்ணதாசன்

அப்பா தி.க.சி யின் முகவரி 21.E. சுடலமாடன் கோவில் தெரு என்றாலும், அப்பா தன்னுடைய வரவேற்பறை ஆகவும் வாழிடமாகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டது 21.B என்று இலக்கம் இடப்பட்ட எங்கள் அம்மாச்சி வீட்டு ஒடுக்கமான பட்டாசலைத் தான்.
அப்பாவின் மேஜை, நாற்காலி, மர பீரோ, ஈஸி சேர் எல்லாம் ‘ அங்கனைக்குள்ள’ தான்.

அப்பா பேப்பர் படிப்பது, மடியில் ஏதாவது புஸ்தகத்தைத் தாங்கலாக வைத்துக் கொண்டு கடிதம் எழுதுவது, யாராவது பார்க்கவந்தால் இரும்பு மடக்குச் சேரில் உட்கார்ந்து பேசுவது எல்லாம் அந்த அறைக்கு முன்னால் இருக்கிற ,’ கல் தார்சா’ வில் . நடுவில் ஒரு மரத் தூண். அதற்கும் சுவருக்குமான கம்பிக் கொடியில் அப்பாவின் ஈரத் துண்டு காய்ந்துகொண்டு இருக்கும்

அந்தக் கல் தார்சாவுக்கும் , தென் வடலாக வரிசையாக இருக்கும் எல்லோருடைய வீட்டுத் தொழுவுக்கும் போக வசதியாக ஒரு ‘ தொண்டு வாசல்’ உண்டு. அப்பா அவசரமாக ‘ ஒண்ணுக்குப் போக வேண்டியது’ வந்தால், அந்தத் தொண்டு வாசல் சுவரைப் பிடித்துக்கொண்டு நடையில் இறங்குவார். நடையை விட்டு இறங்கியதும் வாருகாலை ஒட்டி, அணைவாக ஒரு பழைய கல் கால் தரையோடு தரையாகக் கிடக்கும். அப்பா அந்த இடத்தைப் பயன் படுத்திக் கொள்வார்.

ஓவியர் வள்ளி என்றும் பொன் வள்ளிநாயகம் என்று அறியப்படும் வள்ளி அப்பாவைத் தினசரி காலையிலும் சாயுந்தரமும் பார்க்கிற ஒருவர். அப்பா அப்படி அவசரத்துக்குத் தார்சாவிலிருந்து தொண்டுவாசல் சுவரைப் பிடித்துக்கொண்டு தொழுநடையில் இறங்குகிறதை எத்தனை தடவை பார்த்திருப்பார்!

அப்பாவின் அந்த அசைவை அப்படியே கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்திருக்கிறது போல வள்ளி இதை வரைந்திருக்கிறார். அழுத்தமாகச் சுவர் முகப்பைப் பிடித்திருக்கிற இடது கையும் கைக் கடிகாரத் தொய்வும் குனிந்த முகமுமாக அச்சசலாக அப்படியே இருக்கிறது.

அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில், வேட்டியைச் சரிசெய்தபடி , தொண்டு வாசல் நடையில் இருந்து கல் தார்சாவுக்கு வருவதை, வள்ளி இன்னொரு கோட்டுப்படமாக வரைந்திருக்கிறாரா, தெரியவில்லை.