
எண்ணங்கள் எல்லாம் சொற்களாய் மொட்டவிழ்த்தால்
இதயங்கள் சுருங்கும்; உறவுகள் விலகும்;
சொல்லின்றியும் சிலநேரம் மனசுக்குள் பொத்துவிடும்
கண்ணுக்குள் பூத்த கனல்.
- கோ.முத்துசுவாமி
விண்ணுக்குள் பூத்த கனல் கதிராகும்!
மண்ணுக்குள் பூத்த கனல் பயிராகும்!
பெண்ணுக்குள் கற்பே கனல்! ஒளியே,
கண்ணுக்குள் பூத்த கனல்.
கோடைக் காலத்தில் கனல்நீக்கும் நுங்கு!
மேடைப் பேச்சினில் கனல்பறக்க பொங்கு!
பெண்ணுக்கும் ஆணுக்கும் காதற் பருவத்தில்,
கண்ணுக்குள் பூத்த கனல்.
முன்பனிக் காலத்தில் முகிழ்க்கும் அரும்பினுள்,
முத்தமிடும் இதழ்களில், மூடிவைத்த ஆடைக்குள்,
எட்டியிருந்த காதலரின் இமைமூடாக் கனவிலும்,
கண்ணுக்குள் பூத்த கனல்.
- கு.மா.பா.திருநாவுக்கரசு
அடியோ, உதையோ, வசவோ, கூச்சலோ,
ஒன்றும் பேசாமல் பொறு க்கவென விதி.
குனிந்த தலையை நிமிர வைக்காதே!.
கண்ணுக்குள் பூத்த கனல்.
- மதுவந்தி
வேலால் எழுதி வெல்லத் தமிழில்
வேண்டிய புகழை
வேண்டிப் பெற்றான்
காலால் உதைத்த
கயிலைச் சிவனின்
கண்ணுக்குள் பூத்த கனல்.
எழடா என்பான்
ஏந்திப் பிடிப்பான்
எந்தன் நாவில்
எழுச்சியுந் தருவான்
பழமாம் கந்தன்
பரமன் குருவாம்
கண்ணுக்குள் பூத்த கனல்.
காலைக் காப்பியும்
கை தொடவில்லை
கண்ணில் படுமென்
மனைவியும் இல்லை
வேலை செய்யவும்
ஆள் வரவில்லை
கண்ணுக்குள் பூத்த கனல்.
- இலத்தூர் கி.
சங்கரநாராயணன்
ஓங்கியிருக்கலாம் உனது கை இன்று
எளிதாக இருக்கலாம் அநீதி இழைத்தல்
வாங்கும் பழி பின்னொரு நாள்
கண்ணுக்குள் பூத்த கனல்.
ஆர். வத்ஸலா
மன்னிக்க முடியாத குற்றங்களை நாளும்….
மனத்திற்குள் பூட்டிவைத்து
அழுகிறாய் கோழையாய்…
உள்ளே எழும்தீ உள்ளடங்கிப் போகாமல்….
கண்ணுக்குள் பூத்த கனல்.
(2)
உனக்கென்ன நாளும் எழுதித் தள்ள…
உள்ளே சுரக்கிறது ஓராயிரம் கவிதை…
என்பா எழுத ஏதும் வழியின்றி…
கண்ணுக்குள் பூத்த கனல்.
(3)
திசைகளற்று கிடக்கிறது உனது வானம்….
எனக்கானது எதுவுமில்லை
இதுவரை என்வழியில்….
பூன்னகை பூத்த உனதுமுகம்
காணுகையில்….
கண்ணுக்குள் பூத்த கனல்.
(4)
இதுவரை வந்த வசந்தத்தில்
காதலில்லை….
காதல் என்னுள் வந்தபோது வசந்தமில்லை….
விதியின் வழியை வலியால்
எதிர்கொள்ள….
கண்ணுக்குள் பூத்த கனல்.
(5)
இருட்டுச் சுவராய் மனதில் எழுதினாய்….
நாளை விடியுமென நீயும் நம்பினாய்…
காலை வெளுத்ததும்…உன்காதல் வெளுத்ததும்….
கண்ணுக்குள் பூத்த கனல்.
♦அனங்கன்.
நகரும் காலக் குறியீட்டு படிமங்களில்
போரை உள்வாங்கிய நிலப்பரப்பு மனித
வலிகளை பிரதிபலித்தே நிற்கிறதே மன
கண்ணுக்குள் பூத்த கனல்…!
🌷க.சோமசுந்தரி.
நான் இப்போதெல்லாம்
கவிதையை யோசிப்பதில்லை
தூங்கி விழிக்கும்போது
கவிதை மலர்ந்து
என்னிடமிருந்து சிட்டாய்
பறந்து விடுகிறது
கண்ணுக்குள் பூத்த கனல்
- அழகியசிங்கர்
