ஒருவனின் மௌனம்/பிரதீபன்

ஆண்டுதோறும் அந்த நன்னாளில்
ஆலயத்தில் நிகழும் சொற்பொழிவு அது,
சொற்பொழிவாளர் நாட்டிலேயே
புகழ்பெற்ற ஆற்றலாளர்,
எல்லாம் என் ஏற்பாடுதான்,
ஊரிலே நான்
பெரிய முதலாளி என்று
பேர் பெற்றவனாயிற்றே;
ஊரே திரண்டு வந்து
உட்கார்ந்து கேட்கும்;
கலைந்து போகையில்
பலரும் என்னை வாழ்த்திவிட்டுச்
செல்வார்கள்;
ஆனால் பாருங்கள்,
அந்த இளைஞன் மட்டும்
ஒரு முறையேனும் வந்ததேயில்லை;
இத்தனைக்கும் என் உறவினன்தான் அவன்;
தோண்டித் துருவித் துழாவி
ஆய்ந்ததில்
உண்மை துலங்கியது,
சின்னஞ்சிறு வயதிலிருந்தே
அவனுடைய கல்விக்கு
எந்த உதவியும் யாருமே
செய்ததில்லை, நான் உட்பட;
பாவம்,
வாழ்க்கையில் மிகவும்
பின்தங்கிப் போய்விட்டான்,
எத்தனை பேர் வாழ்த்தி என்ன ?
அந்த ஒருவனின் மௌனம்
என் நெஞ்சை அறுக்கிறதே.

                           -