நாடகத்திற்கான குறிப்புகள்/ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி

ஆசிரியர்; எம். டி. முத்துக்குமாரசாமி

நூல்: மைத்ரேயி மற்றும் பல கதைகள்.

கதை அறிமுகம்:

அலெக்ஸ் எனும் நண்பனுக்கு எழுதும் கடிதமாகத் துவங்குகிறது. திரைகள் எனும் நாடகத்தை இயக்குவதற்கு சம்மதித்ததற்கு நன்றி சொல்கிறார் கதாசிரியர். இரண்டு வாரங்களாக நடந்து வரும் நாடக ஒத்திகை இன்னும் அதற்கான குறிப்புகள் தேவை என உணர்த்தி விட்டது அதனால் இதை எழுதுகிறேன். போன தடவை எழுதிய குறிப்புகள் சிறுகதை என்று பிரசுரிக்கப்பட்டது இது அப்படி ஆகக்கூடாது. அது தபாலில் கிடைத்தபோது கான்டீனிலிருந்து கல்லூரிக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். குருடன் ஒருவனோடு வரும் இளம்பெண் அவன் இயற்கை உபாதை கழிக்க அழைத்துச் சென்று உதவுகிறாள். அவ்வழியாகச் செல்வோர் தர்மசங்கடமாய் பார்க்கின்றனர்.
குருடனாக அலெக்ஸ், இளம்பெண்ணாக கதாசிரியர். கதாசிரியரின் இடத்தில் வழிப்போக்கர் என்று ஒப்பிடுகிறார்.
வெட்டவெளி பற்றிய சிந்தனை, நட்சத்திரங்கள்,கோள்கள், அதாவது அண்டசராசரங்களை வெளி பிடித்துக் கொண்டிருப்பது.
வார்த்தைகள், அவற்றின் இடைவெளி, வெளியானது பேசும்போதும் எழுதும் போதும் சொற்களுக்கு இடையில் இருப்பதற்கு காரணம் தெரியாது ஏனெனில் வெட்ட வெளியானது எல்லாவற்றுக்கும் இடையில் உள்ளது .அதாவது இது மௌனம் ஆகிறது. இயக்கமற்ற ஒன்றில் இயங்கும் பொருள் பல.
, எது நடந்தாலும் கல்லுளி மங்கனாய் நிற்கும் வெளி. நாடகமும் இதைப்போன்றதே. இதன் களம் வெளி தான் அது பொது வெளியாகவும் மனிதனின் அகவெளியாகவும் ஊடாடுகிறது. நான் வானசாத்திரமும் பௌதிகமும் படித்திருந்தால் வெட்டவெளியில் .ஆர்க்கிமிடீஸ் போல கையில் நெம்புகோலுடன் நின்று கிரகங்களை இடம் மாற்றி நட்சத்திரங்களைத் துவம்சம் செய்து விடுவேன் என்கிறார். நண்பர் இளங்கோவன் வந்து இதைப் படித்துவிட்டு சம்பவம் எதுவும் இல்லையே அதனால் இது சிறுகதை ஆகாது என்று சொன்னார் என்கிறார் …
வெட்டவெளி மனித மூளையின் புரிதலுக்கு அப்பாற்பட்டது , மனிதன் வெளியுடன் கொள்ளும் உறவு யதார்த்த உறவு, கற்பனை உறவு,குறியீட்டு உறவு என மூன்று வகையாக உள்ளது.கதை ஒன்றில் படைப்பவன் கதை சொல்பவனாக இருக்கும்போது கதைக்கும் அவனுக்கும் இருப்பது யதார்த்த உறவு,
அவனே கதையின் கதாபாத்திரங்களாக மாறி உணர்வு வயப்பட்டு கதை நகரும்போது யதார்த்த உறவின் வெளியை எல்லையைக் கடந்து கற்பனை உறவில் நுழைகிறான்.
முப்பத்தாறு ச.மீ பரப்பளவை பத்து முறை குதிரையில் சுற்றிவிட்டு ஐயாயிரம் கி.மீ கடந்து, புதை மணலில் பிரவேசிக்கும்போது குறியீட்டுத் தளத்தில் இருக்கிறான்.
இனி திரவமாகும் மலை, நெருப்பு ஆறு என இயல்புக்கு மாறானவைகள் பேசப்படுகையில் அது அதீத குறியீட்டுத் தளமாகிறது.
நாடகம் துவங்கி ஆறாவது நிமிடம் இந்த அதீத குறியீட்டுத் தளத்தை அடைய வேண்டும்.
இதிலிருந்து யதார்த்த வெளிக்கு தொண்ணூறாவது நிமிடம் ஓடி வரவேண்டும். இதுவே இந்திய நாடக மரபு.கூத்துக்கலை இதில் அடங்காது.
அதீத களத்தில் பொருள் பொருளாகவே இருக்கும். யதார்த்த களத்தில் அந்தப் பொருள் காலத்திற்கேற்ப பயன்பாட்டிற்கு வந்துவிடவேண்டும். அப்படி வருவதே கலை என்றாகிறது.
நமது கலாச்சாரப்படி ஆடவரை விடப் பெண்களின் பார்வைக்கு எல்லை குறைவு. இவர்கள் தன் நாடகங்களைப் பார்த்து ஆண்களைப்போல் விரிந்த பார்வை பெறுவர் என்கிறார்.
மேலை நாட்டு நாடகவியல் சடங்கியல் தன்மையை நமது நாடகத்தில் புகுத்த முடியாது. பார்வையாளன் சாமியாடி விடுவான், விளம்பரங்களால் நாடகங்கள் வரவேற்பு பெறுவது சரியானதல்ல.
சுழலும் மேடை அமைத்து அதில் ஆளுயரக் கண்ணாடிகள் வைக்க வேண்டும்.கோரஸ் பாடகிகள் கையில் கோலிக்குண்டுகள் தந்து ஒலிக்கச் செய்ய வேண்டும்,
இசைக்கு பீகார் பழங்குடியினரின்,’ மாந்திர்’ என்ற டிரம் ஐந்தும்,செண்டை, இடக்கான் மேளங்களும் ஏற்பாடு செய்யவேண்டும்.
இவரின் நாடகத்தில் முக்கிய நடிகை ஜெசிகாவிற்கு நாணமென்பது தெரியாது. துணை நடிகை ரூபிக்கு நாணத்தைத் தவிர ஒன்றும் தெரியாது என்றும் சொல்கிறார். முதலில் இவர்களுக்கு இரண்டையும் கற்றுத்தரவேண்டும் என்கிறார்
வெளியானது பேசும்போதும் எழுதும் போதும் சொற்களுக்கு இடையில் இருப்பதற்கு காரணம் தெரியாது ஏனெனில் வெட்ட வெளியானது எல்லாவற்றுக்கும் இடையில் உள்ளது போல்.அதாவது இது மௌனம் ஆகிறது.இயக்கமற்ற ஒன்றில் இயங்கும் பொருள் பல.
நண்பர் இளங்கோவன் வந்து இதைப் படித்துவிட்டு சம்பவம் எதுவும் இல்லையே அதனால். இது சிறுகதை ஆகாது என்கிறார் …
மேலும் தொடர்கிறது இவரது குறிப்புகள். இவர் ஜெசிகாவை நெருங்கும்போது தேவராட்டத்தில் வருவதுபோல் தெஹடீஹ,தெஹடீஹ லப்டப் என்று ஒலியெழுப்பி ராஜசேகரனைப் பாட வைக்கவேண்டும் இவரைத் தூக்கிலிடும் காட்சியில் செபாஸ்டியன் பாக்கின் கான்செர்ட்டிலிருந்து ஒருபகுதியை இசைக்க வேண்டும் என்கிறார்.
இவ்வாறு நாடகம் பற்றிய குறிப்புகளைச் சொல்பவர் இடையில் ஆங்கில எழுத்தாள நண்பர் சுதர்சன் வருவதையும் அவர்,’ ஜாதி மத வர்க்க பேதத்தால் நீ ஜெசிகாவைக் காதலிப்பதை நேரில் சொல்ல முடியாமல் நாடகமாடுகிறாய்’ என்றதையும் சொல்கிறார்.அதோடு கற்பனையாக்க உத்தி மட்டும் போதாது,’ உடலுடன் வாழக் கற்றுக்கொள்’ என உணர்த்தியதும் காட்டுகிறார்.
இதில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை,.சான்றாக ஒன்று. இயல்பாகவே தடிமனான உடல்வாகு கொண்டவர்கள் தடியர்களாம்,கண்டதைக் கண்டபடி தின்பதால் பெருத்தவர்கள் குண்டர்களாம். காற்றை ரொப்பினாலும் சரி, சேற்றை ரொப்பினாலும் சரி வயிறு ஊதிக் கொண்டே போகிறது. தொந்தி வயிறு வெளியுடன் உண்டாக்கும் உறவு கலாச்சாரச் சின்னம்.
எண்பதுகளில் சென்னையில் வெற்று அலட்டல்களால் நிறைந்த ஆங்கில நாடகக் குழுக்களைக் கிண்டல் செய்து,’ஸில்வியா’ என்ற புனைபெயரில் எழுதப்பட்ட கதை இந்த கதை,’கிரணம்’ இலக்கியச் சிற்றிதழில் பிரசுரமானது என்ற குறிப்பும் தருகிறார்.
தரவுகள் நிறைந்த நாடகத்திற்கான குறிப்புகளைச் சிறுகதை எனச் சேர்த்திருப்பது ஆசிரியருக்கு கைவந்த கலையாகிறது.வாசிப்பவர்களுக்கு உலகம் ஒரு நாடக மேடை அதில் நாமெல்லோரும் நடிகர்கள் என்பதை நினைவூட்டுவதாக அமைகிறது இந்தப் படைப்பு.