நான் போட்ட வேஷம்/
ஆர். வத்ஸலா


தப்பா நெனெக்காதீங்க, காந்திஜி அளவுக்கு இல்லெனாலும், நான் எப்பவாவது இக்கட்டுலேந்து தப்பிக்க புளுகி இருக்கேனெ தவிர மொத்தத்துலெ நெஜ வாழ்க்கெலெ நடிச்சது கெடெயாது. நான் ஒரு தடவெ வேஷம் போட்டுண்டது உண்டு நாலு பேர் பார்த்து புகழும்படி ‘பெர்ஃபாம்’ பண்ண அதாவது ”நிகழ்த்தி காட்ட” . ஆனா என் ஜாதகத்துல நிகழ்த்தீச்வரன் மிஸ்ஸிங்னு தோணுது.
மும்பைலெ தமிழ் பள்ளிலெ நாங்காம் வகுப்பு படிச்சுண்டிருக்கச்செ ஹிந்தி ஒரு பாடம் எங்குள்ளுக்கு. எங்க ஹிந்தி டீச்சர் ’ஸ்கூல் டே’ காக தானே எழுதின ஒரு நாடகத்தில என்னெயும் என்னோட அருமெ தோழி எஸ். வத்ஸலாவெயும் சேத்துண்டா. காரணம் சிம்பிள் – ரெண்டு பேரோட தோல் கலர் க்ரேக்க விதிப் படி ‘அழகு’. வேடிக்கெ என்னன்னா எனக்கு காக்கா வேஷம் என்ன விட அவ இன்னும் அழகு அதுனால அவளுக்கு குயில் வேஷம். நாடகத்தோடெ தலெப்பு – ’மீடீ போலி போலோ தும் – இனிய பேச்சு பேசு’ பெரிய கிளாஸ் பொண்ணுங்க இனிக்கற பேச்சு ஏம் பேசணும்ன்னு அரெ மணி வெளெக்குவாங்க (இதெல்லாம் அந்த ஹிந்தி டீச்சருக்கு தான் மொதெல்லெ சொல்லணும்) நானும் எஸ். வத்ஸலாவும் அது வரெக்கும் தூங்கி போயிடாம தேமேனு நிக்கணும். பெரியவங்க லெக்சர் முடிஞ்சதும் நான் காக்கா போல கத்தணும் ஒடனே எஸ். வத்ஸலா தன் கற்பனேலெ குயில் எப்பிடி கத்தூன்னு நெனெச்சாளோ அப்பிடி கத்தணும். உண்மேலெ டீச்சர் உள்பட குயில் எப்பிடி கத்தூன்னு எங்க யாருக்கும் தெரியாது. எனக்கு தெரிஞ்சு மும்பைலெ அட் லீஸ்ட் எங்க மாதுங்காலெ குயில் கெடெயாது. எஸ். வத்ஸலா கத்தின் ஒடனே எங்க பாடத்திலெ இருந்த ’மீடீ போலி போலோ தும்’ கவிதெயெ நல்லா சொல்ல தெரிஞ்ச 5 பொண்ணுங்க பாடுவாங்க . மத்தவங்க முடிஞ்ச அளவுக்கு வாயெசைப்போம். அந்த கவிதெலெ ரெண்டு வரி காக்காயெ ’யாரும் விரும்பறதில்லெ, குயிலோட பாட்டெ எல்லாரும் கேக்காறாங்க, அப்பிடீன்னு வரும் அதுனால தான் ரெண்டு வெள்ளெ வத்ஸலாக்கள் கருப்பு ட்ரெஸ்லெ!
அந்த ட்ரெஸ்தான் வில்லன் க்ளைமேக்ஸ்லெ. ஏற கொறெய ஒரு மாசம் ஹிந்தி க்ளாஸ்லெ நான் “கா கா கா கா” சொல்ல , எஸ். வத்ஸலா தனக்கு தெரிஞ்ச குயில் கத்தல் கத்தி, நாங்க நடிக்கறது கன்ஃபர்ம் ஆனப்பறம் டீச்சர் சொன்ன படி எங்கம்மாக்கள் எங்க ரெண்டு பேருக்கும் கறுப்பு சாடின் துணிலெ நீள பாவாடெயும் (அப்பெல்லாம் சின்ன பொண்ணுங்க குட்டெ பாவாடெ போட்றதுண்டு. எங்க ரெண்டு பேருக்கும் எட்டு வயசாயிடுச்சு. நீள பாவாடெக்கு க்ரேஜுவேட் ஆயிட்டோம்.) மணிக்கட்டு வரெக்கும் கை வெச்ச சட்டெயும் எப்பிடியோ டெய்லருக்கு புரிய வெச்சு தெச்சு கொடுத்துட்டாங்க எங்க அம்மாங்க .
’ஸ்கூல் டே’ அன்னிக்கு மேடெ பின்னாடி ஹிந்தி டீச்சர் சொல்லியிருந்த நேரத்துக்கு போயிட்டோம் ரெண்டு பேரும். உள் அறெலெ பிரின்சிபலும் டீச்சரும் பேசிட்டிருந்தாங்க. பிரின்சிபல் கேட்டாங்க – ஹௌ ஹேவ் யூ டிசைண்ட் த காஸ்டியூம் ஃபார் த க்ரோ?’ எனக்குத் தெரிஞ்ச துளியூண்டு ஆங்கிலத்துலெ அவுங்க என்னெ பத்தி பேசறது கேட்டு பெருமெயா இருந்துது. டீச்சர் மெல்லிய குரல்லே வெளக்கினா.”வாட்! இஃப் திஸ் கர்ல் வேர்ஸ் எ ப்லெக் கலர் பாவாடெ எண்ட் ப்லெக் கலர் லாங் ஸ்லீவ் ப்ளௌஸ் ஷீ வில் பிகம் எ க்ரோ? ட்ராப் இட்” டீச்சர் வெளிலெ வந்து எங்களெ பாத்து ‘நீங்க ஒங்க அப்பா அம்மாவோட ஒக்காருங்க. நம்ப ட்ராமா வரெச்செ நா கூப்பட்றேன்’
நாங்க சந்தோஷமா போய் ஒக்காந்து கிட்டோம். ஒக்காந்து முழு நிகழ்ச்சியெ பாத்து முடிச்சோம். எங்களெ கடெச்சி வரெக்கும் ஏன் கூப்பட்லெனு தெரியாமெ அப்பா அம்மாவோடெ புது ட்ரெஸ்லெ கைகளெ ரெக்கெ மாதிரி ஆட்டிண்டே வீடு போய் சேந்தோம். அம்மாவுக்குதான் கவலெ அந்த ட்ரெஸ்ஸெ எப்பிடி ஒபயோகப் படுத்தறதுன்னு.
27 3 2923 #உலக நாடக தினம்

One Comment on “நான் போட்ட வேஷம்/
ஆர். வத்ஸலா”

  1. எத்தனை வேதனையான அனுபவத்தை வேடிக்கையாக விளக்கி விட்டீர்கள்….

    அறியாமை இள வயதில் வரம்.

    அருமை…

Comments are closed.