ஒரு நாள்தான் அதை நான் எடுக்கவில்லை/வண்ணதாசன்


வாங்கி 13 வருடங்கள் ஆகின்றன. இந்த ஸ்ப்லெண்டர் வாங்குவதற்கு முன் ரொம்பகாலமாக ஒரு ராஜ்தூத் வைத்திருந்தேன். அதுவும் கருப்புதான். இதுவும் சில சிவப்பு, நீல அலங்காரக் கோடுகள் தவிர முழுக்கருப்புதான். பேனா மை முதற்கொண்டு அதுதான் பிடிக்கிறது. மனதின் தேர்வுக்கு நிச்சயமான காரணங்கள் இருக்கும். மனதை நம்புகிறவர்கள் மனதிடம் கேள்விகள் கேட்பதில்லை. அடிப்படையான கேள்விகளுக்கு அது தரும் தீவிரமான பதில்களைத் தாங்கமுடியாது போகும். நம் சட்டைப் பைகளை நாமே ஏன் கிழித்துக்கொள்ள வேண்டும்?
மறுபடியும் ஸ்ப்லெண்டர் பற்றி. இந்த பதிமூன்றாம் ஆண்டில் அல்ல, வாங்கிய முதல் ஆண்டிலேயே இந்த பதிமூன்றாம் ஆண்டுக் களை அதற்கு உண்டு. அப்படித்தான் என் பராமரிப்பு இருக்கும். எப்போது உதைத்தாலும் ஓட்த் தயாராக இருக்கும். அதற்கான பட்டறை ஒழுக்கம் எல்லாம் அதற்கு உண்டு. ஆனால் துடைத்துக் கழுவிப் பளபளப்பு ஏற்றுவதில்லை. எந்தெந்த ஐப்பசி மழைச் சேறும் வருட வாரியாக அதில் அப்பி இருக்கும். யார் யாரோ இட்ட புழுதிச் சுருக்கொப்பங்களை தன் கருப்பு திரேகத்தில் ஏந்தியிருக்கும். அடையக் கருங்குளம் பனையேறிக் கடன்தாரர் கிணறு தோண்டி நட்டப்பட வருத்தத்தில் பேசிய அத்தனை சொற்களும் நான் சென்னையில் இருந்த காலம் வரையில் கூட ராஜ்தூதின் கருப்பு உடலில் வழிந்துகொண்டிருந்தன.
இது மாநகரங்கள் அறியாதது. திருநெல்வேலி ஊரோடு வந்த பிறகு எடுத்த வாகனம். இதற்குக் கடற்கரையும் கடற்கரை மணலும் தெரியும். அலைகள் சத்தம் கேட்டால் இப்போதும் அது சற்றுத் தயங்கி முன் நகரும். பொரித்த மீன் விற்கும் கடைகளை, ராம் எவ்வளவு அறிவாரோ, அவ்வளவு இதுவும் அறியும். அதையெல்லாம் விட, அது என்னை அறியும். ஒரு வளர்ப்புப் பிராணியின் எல்லாச் செல்லத்தையும் ஒரு ‘வளர்ப்பு வாகனம்’ அடைந்து விடுகிறது. உங்கள் குதிரையின் பிரத்யேகக் கனைப்புக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல ஒரு இரும்புக் குதிரையின் உறுமல். ஒரு பாமரேனியன் குட்டி உங்கள் காலைச் சுற்றி முனங்கும் கொஞ்சலை நான் இதன் சீட்டைத் தட்டிக் கொடுக்கும் போது கேட்டிருக்கிறேன். ‘என்ன? ரெடியா, போகலாமா?’ என்று நான் அனுமதி பெறுவது உண்டு அதனிடம்.
ஜன்னல் ஓரமாகத்தான் நிறுத்தியிருப்பேன். எப்போதும். மரம், செடி, கொடி எல்லாம் அதை நிறுத்தியிருக்கிற இடத்தின் வட, மற்றும் மேற்குப் பக்கங்களில் தான். சிட்டுக் குருவிகளுக்குக் கண்ணாடி பார்த்து, தன் முகத்துடன் தானே கொஞ்சுகிற சுபாவம் உண்டு. எவ்வளவு ஞாபகப் படுத்திப் பார்த்தாலும், ஒரு மைனாவோ, தேன் சிட்டோ, கருங்குருவியோ, ஏழு சகோதரிக் குருவியோ இதன் மேல் அமர்ந்து பறந்துபோன காட்சியை மீட்க முடியவில்லை.
உட்கார்ந்து பறந்துபோவது இருக்கட்டும். ஒரே ஒரு நாளுக்குள். அனேகமாக எங்கள் கண்ணில் படாது நழுவிய இரு தினங்களுக்கு முந்திய ஒரு பகலில். ஏதோ ஒரு பறவை ஸ்ப்லெண்டரின் முகப்பில், ஸ்பீடாமீட்டருக்கும் அதன் தடுப்புக் கவசத்திற்கும் இடையில் உள்ள இடுக்கில் ஒரு முழுக் கூட்டையே கட்டி முடித்திருந்தது.
இந்தப் பக்கத்து இலைகளும் சருகுகளும் கூட இல்லை. ஒரு வகை மிருதுவான நீண்ட இலைகளை எங்கிருந்தோ சேகரித்து அடுக்கியிருந்தது. அது மேல் அடுக்கில். அதன் கீழ் அடுக்கில் இலைகளைத் தண்ணீரில் அழுகவைத்துப் பதப் படுத்தி. அலகால் சிறு சிறு துணுக்குகளாக்க் கிழித்து, பட்டுப்போல இருக்கிற வகையில். கருகிய தாட்கள் சாம்பல் வெப்பத்தில் இறுதிப் பௌதிக உருவை அடைந்து திருகி நிற்குமே அது போல நொறுங்கத் தயாரான நிலையில் இருந்த அந்த அடுக்கின் கீழ் எல்லாப் பறவைகளும் முட்டையிடத் தேர்ந்தெடுக்கும் சணல்நூல்களின் இழைகளை மேலும் பிசிறாக ஆக்கிப் பொன் மினுமினுப்புக் கூட்டிய ஒரு சிறு வட்டம். எனக்கு முடிந்தால் அதில் உடனடியாகப் படுத்துக் கொள்வேன். அத்தனை பேறுகாலக் கரிசனம் நிரம்பிய மெத்தை அது. இடையில் இடையில் கெட்டிப்படுத்தி அசையாது வைப்பதற்கான மிகச் சில வேப்பிலை நரம்புகள். இன்னும் ஒரு அரை நாள் தாமதத்தில், நான் வண்டியை எடுத்திருந்தால் இரண்டு மூன்று முட்டைகளே இடப்பட்டிருக்கும்.
நான் வண்டியை எடுத்து உபயோகிக்க வேண்டிய நிலையில் இருந்தேன். ஒரு முழுப் பகலின் வேலைக்கு அதன் சக்கரங்கள் எனக்குத் தேவைபட்டிருந்தன. வெளியே போய்விட்டு வர எட்டு மணி ஆகிவிட்டது வண்டியை அதனுடைய இடத்தில் கொண்டு வந்து நிறுத்தும் போது, ஒரு கூட்டின் அத்தனை அடுக்குச் சிதைவும் அதே இடத்தில் கிடந்தன. எந்தப் பறவை கட்டியதோ அது வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கும்.
வாசல் கதவைத் தாளிடும் போது. எதிரே அசையும் எருக்கலம் பூக்களின் கருநீலத்தில் இன்று பௌரணமி என்று எழுதப் பட்டிருந்தது.
நான் நிலா பார்க்கவில்லை. நான் பார்க்கவேண்டியது அந்தப் பறவையை, மிகுந்த குற்றவுணர்வுடன்.