சவேராவில் சூரிய வம்சம் !

ஜெ.பாஸ்கரன்

மாலை 5.48. சவேரா ஹோட்டலின் ‘சமாவேஷ்’ ஹால். வாயிலிலேயே வாய் நிறைய வரவேற்றவர் கல்கி ஆசிரியர் ரமணன் அவர்கள்! மெயின் ஹாலுக்குள் போகு முன் வலது பக்கம் வைத்திருந்த ‘குட்டி சமோசா’ வும், காப்பி / தேநீர் பானங்களும் சுவையுடன் அமைதியாக வரவேற்றன. விரைவாக முடித்துக்கொண்டு, ஹாலுக்குள் நுழைந்தால், அங்கே கரும்பச்சை சேலையில் பூப்போட்ட சந்தன வண்ண பார்டர் புடவையில் அகமும் முகமும் மலர வருவோரையெல்லாம் வரவேற்று, புகைப்படமும் எடுத்துக்கொண்டு ‘காஃபி சாப்டையா?’ வில் தன் அன்பு முழுதையும் குழைத்து வரவேற்றவர் திருமதி சிவசங்கரி அவர்கள்!

மகிழ்ச்சி பொங்கும் முகங்கள் – உறவினர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள் என அங்குக் கூடியிருந்தவர்களைக் காணும்போது ஏதோ நம் உறவினர் வீட்டுத் திருமண வரவேற்புக்கு வந்துவிட்ட குதூகலம்! 2019 ல் வெளியான அவரது ‘சூரிய வம்சம்’ நினைவலைகள் – இரண்டு பகுதிகள் – புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு (மொழிபெயர்த்தவர் தீபசித்ரா அனந்தராம்), ஒரே புத்தகமாக, “Surya Vamsam” Memoirs of Sivasankari, என்ற பெயரில் வெளியிடப்பட்டது – நீண்ட நாட்களுக்குப் பிறகு படைப்பாளிகள் பலர், நேரடியாகக் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. நித்தியஶ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிய ‘அகரம்’ எனத் தொடங்கிய அம்மாவின் பெருமைகளைச் சொல்லும் பாடலுடன் தொடங்கியது நிகழ்ச்சி!

நூற்றுக்கும் அதிகமான சிவசங்கரியின் படைப்புகளைப் பதிப்பித்த வானதியே இந்த ஆங்கிலப் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளது சிறப்பு. திரு ராமநாதன் அவர்கள் எல்லோரையும் வரவேற்றுப் பேசினார். சிவசங்கரி இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்யும் வகையில்,’இது சுயசரிதை அல்ல நினைவலைகள்’ என்பதை எடுத்துக்கூறி, ‘Memoirs’ – வாழ்க்கையின் நிகழ்ச்சிகளின் உணர்வுபூர்வமான பிரதிபலிப்பு (மாலனின் முன்னுரையில் குரிப்பிட்டுள்ளபடி) என்றார். முகவுரை எழுதிய மாலன், மொழிபெயர்த்த தீபசித்ரா அனந்தராம், விழாவிற்குத் தலைமை வகித்த இந்து ரவி, மற்றும் திருமதி டாக்டர் சுதா சேஷைய்யன், திருமதி நீனா ரெட்டி, திருமதி மினி கிருஷ்ணன் ஆகியோரை வரவேற்றுப் பேசினார்.

புத்தகத்தை வெளியிடுவதற்காக அமெரிக்காவிலிருந்து தன் மனைவியுடன் வந்திருந்த தன் சகோதரரை (திரு லக்‌ஷ்மணன், அவர் மனைவி திருமதி மேரி பெத் லக்‌ஷ்மணன்) அறிமுகம் செய்து வரவேற்றதில் சூரிய வம்சத்தின் பாசம் வெளிப்பட்டது.

புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய லக்‌ஷ்மணன், தன் இளமைக்கால நினைவுகளை, சிவசங்கரியின் கடும் உழைப்பு மற்றும் பன்முகத்தன்மை இவற்றுடன் பகிர்ந்துகொண்டார். திரு ரவி, மாலன், சுதா சேஷய்யன், நினா ரெட்டி ஆகியோர் புத்தகம் பற்றியும், சிவசங்கரி என்னும் படைப்பாளிக்குள் இருக்கும் நல்ல மனுஷியைப் பற்றியும் வாழ்த்துரைத்தார்கள்.

சிவசங்கரி தன் கணவர் சந்திரசேகர் பற்றி எழுதியுள்ளவைகளை திரு பி.சி.ராமகிருஷ்ணன் வாசிக்க, அரங்கமே மனம் கனத்த அமைதியுடன் இருந்தது. ‘சிவசங்கரி சந்திரசேகரன் சாரிட்டீஸ்’ ஐச் சேர்ந்த திரு ரவிசங்கர் நன்றி சொல்ல விழா இனிதே முடிந்தது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய திருமதி கெளரி ராமநாராயணன் சிறப்பாக ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தார்.

விழாவின் ஹைலைட் என்றால், விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் (குடும்பத்திற்கு ஒன்று என்ற வகையில்), சூரிய வம்சம் ஆங்கிலப் புத்தகம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டதைச் சொல்லவேண்டும். ஆயிரம் ரூபாய் விலையுள்ள புத்தகம், அழகாகப் பேக் செய்யப்பட்டு, ஒரு வண்ணமயமான காகிதப் பையில் போட்டுக் கொடுக்கப்பட்டது – கல்யாணத் தாம்பூலம் போல!

மகிழ்ந்து, ‘எதிர்பாராதது நீங்கள் புத்தகம் கொடுத்தது’ என்றேன். வழக்கமான புன்னகையுடன், “நம் நினைவாக நாம் ஏதாவது நமக்குப் பிடித்தவர்களுக்குச் செய்ய வேண்டாமா…” என்றார் – அவர்தான் சிவசங்கரி! சுவையான டின்னர் – அதைவிட சுவையானது வந்திருந்தவர்களின் நட்பும், மகிழ்ச்சியும்!

தினமணி வைத்தியநாதன், லேனா – ரவி சகோதரர்கள், பட்டுக்கோட்டை பிரபாகர், டேக் செண்டர் சாரி, ராணி மைந்தன், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ கிரிஜா ராகவன், வித்யா சுப்ரமணியன், பாக்கெட் நாவல் அசோகன், ப்ரியா கல்யாணராமன், விருட்சம் அழகிய சிங்கர் ( இந்திய இலக்கிய சிற்பிகள் புத்தக வரிசையில் அவர் தொகுத்துள்ள ‘ஞானக்கூத்தன்’ புத்தகம் கொடுத்தார்) என ஏராளமான வி.ஐ.பி. முகங்கள்! அருமையான, நிறைவான நிகழ்வு.‘சூரிய வம்சம்’ ஆங்கிலத்திலும் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகின்றது; கையில் கொடுக்கப்பட்டுள்ள புத்தகம் அத்தகையது!