கம்பனைக் காண்போம் -72/வளவ. துரையன்

ஐவரை அறுவராக்குதல்
கசட்டுறு வினைத்தொழில் கள்வ ராய்உழல்
அசட்டர்கள் ஐவரை அறுவ ராக்கிய
வசிட்டனும் அருமறை வடிவு போன்றொளிர்
விசிட்டனும் வேத்தவை பொலிய மேவினர் [256]

[அசட்டர்கள்=அறிவில்லாதவர்கள்; வேத்தவை=வேந்தனுடைய அவை;

கம்பனின் இப்பாடலில் ’அறுவர்’ என்பதற்கு அழிந்து போகிறவர்கள் எனப் பொருள் கொள்ளல் வேண்டும்; வசிட்டன் என்பது வசிட்ட முனிவனையும், விசிட்டன் என்பது கலைக்கோட்டு மாமுனிவனையும் குறிக்கிறது. வசிஷ்டன் என்பதைக் கம்பன் வசிட்டன் என ஆக்கியது போல விசிஷ்டன் என்பதை விசிட்டன் என்று ஆக்கியிருக்கிறான். விசிஷ்டன் என்பது விசேஷ சிஷ்டன் அன விரிந்து நல்லொழுக்கமுடையவன் எனப் பொருள் தரும்.
வசிட்டனும் கலைக்கோட்டு முனிவனும் அரசனின் அவைக்கு வந்து சேர்ந்ததை இப்பாடல் சொல்கிறது. குற்றமான தீவினைகளைச் செய்பவர்கள் கள்வர்கள் ஆவர்; அவர்களைப் போல் திரிகின்ற அசட்டர்கள்தாம் நம்மிடம் உள்ள ஐவர்; அதாவது நம்மிடம் உள்ள ஐந்து புலன்களையும் கம்பன் கள்வருக்கு ஒப்பிடுகிறான். அவை கொஞ்சம் ஏமாந்தாலும் நம்மைத் தீவினைகளின் பால் கொண்டு போய்ச் சேர்த்து விடும். அப்படிப்பட்ட கள்வர்கள் அழிந்து போகும்படிச் செய்த வசிட்டனும் நல்ல ஒழுக்கம் உடையவனுமான கலைக்கோட்டு முனிவனும் வேந்தன் அவைக்கு வந்து சேர்ந்தார்களாம்.