சாருநிவேதிதா பதிவு

என் ஹார்ட் ஸ்பெஷலிஸ்டைப் பார்க்க வேண்டுமானால் ரெண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மூவாயிரம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறது. நண்பர் என்னடாவென்றால், படு சாதாரணமாக உங்களைப் பார்க்க வேண்டும் என்கிறார். போயும் போயும் ஒரு உடம்பை கவனிக்கும் டாக்டருக்கு இத்தனை மரியாதை. இவ்வளவு பெரிய கட்டணம். உங்கள் ஆன்மாவையே கவனித்துக் கொள்ளும் இலக்கியவாதி எல்லாவற்றையுமே உங்களுக்கு ஓசியில் தர வேண்டுமா?

ஜக்கியின் ஆசிரமத்தில் தியான அறையைப் பார்க்கப் போனேன். அப்போது மகாயோகி சிலை கட்டப்பட்டிருக்கவில்லை. தியான அறையைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது சுமார் இருபது பேரழகிகளும் பத்து யுவர்களும் என்னிடம் உண்டியல் குலுக்கி இந்த மகா பெரிய விஷயத்துக்குப் பங்களியுங்கள் என்று கேட்டார்கள். ஒவ்வொருவராக. முதலில் ஒரு பெண். அவரைக் கடந்தால் இன்னொரு பெண். அவரைக் கடந்தால் இன்னொரு பெண். எதுவும் கொடுக்காமல் இத்தனை பேரையும் தாண்டிப் போவதற்குக் கடும் சித்தம் வேண்டும். நான் பொய் சொல்லவில்லை. கண்டதை எழுதுகிறேன்.

இத்தனையும் ஒரு தியான அறையைப் பார்த்துச் சென்றதற்கு. ஜக்கியை சந்திக்க வேண்டுமானால்?

அன்பரே, நான் ஜக்கியை விடப் பெரிய ஆள். நான் சொல்லவில்லை. மஹா பெரியவர் சொல்கிறார். ஆன்மீகவாதிகளை விட எழுத்தாளர்களும் கவிகளும்தான் பெரியவர்கள் என்கிறார் அந்த ஞானி. ஒரு மொழியையும், கலாச்சாரத்தையும், நிலத்தின் அடையாளத்தையும் காப்பாற்றுபவர்கள் எழுத்தாளர்களே என்கிறார் அவர்.

அப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு இலவசமாக எழுத்தையும் கொடுத்து, உங்களைச் சந்திப்பதற்காகத் தங்கள் நேரத்தையும் கொடுக்க வேண்டும், இல்லையா?

முகநூலில் : ஆர்.கந்தசாமி