லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி


——
47
உன் கதவுகள் எதையும் திறக்காமல்
—-
உன் கதவுகள் எதையும் திறக்காமல்
உன் இதயத்தை நீ உலகை நோக்கித் திறக்க இயலும்
உன் ஜன்னல்களின் வழிப் பார்க்காமல்
நீ தாவோவின் சாராம்சத்தைப் பார்க்க இயலும்
நீ அதிகமும் அறிகையில்
குறைவாகப் புரிந்துகொள்கிறாய்
குருவானவர் புறப்படாமல் வந்து சேர்கிறார்
பார்க்காமல் ஒளியை அறிகிறார்
ஒன்றையும் செய்யாமல் சாதிக்கிறார்
—-
48
அறிவைத் தேடிச் செல்கையில்

அறிவைத் தேடிச் செல்கையில்
ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒன்று சேர்க்கப்படுகிறது
தாவோவின் பயிற்சியிலோ
ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒன்று கைவிடப்படுகிறது
தினசரி ஒவ்வொன்றாகக் குறைக்கையில்
கடைசியில் செயலின்மை சாதிக்கப்படுகிறது
ஒன்றுமே செய்யாமல் இருக்கையில்
எதுவுமே செய்யாமல் விடப்படுவதில்லை
எல்லாவற்றையும் அதனதன் போக்கில் விடும்போது
செயல்வன்மை கைவரப்பெறுகிறது
இடையீடு செய்வதால்
எதையும் சாதிப்பதற்கில்லை
——
49
குருவானவருக்குத் தனித்த மனம் ஏதுமில்லை

குருவானவருக்குத் தனித்த மனம் ஏதுமில்லை
அவர் மக்களின் மனங்களோடு இணைந்திருக்கிறார்
அவர் நல்லவர்களுக்கு நல்லவராய் இருக்கிறார்
அவர் நல்லவர்கள் அல்லாதவர்களுக்கும் நல்லவராய் இருக்கிறார்
அதுவே உண்மையான நல்லதன்மை
அவர் நம்பக்கூடியவர்களை நம்புகிறார்
அவர் நம்பஇயலாதவர்களையும் நம்புகிறார்
அதுவே உண்மையான நம்பிக்கை
குருவானவரின் மனம் அகண்ட வெளியைப் போன்றது
மக்கள் அவரைப் புரிந்துகொள்வதில்லை
மக்கள் அவரைப் பார்த்து காத்திருக்கிறார்கள்
அவர் அவர்கள் அனைவரையும் தன் குழந்தைகளைப் போலப் பாவிக்கிறார்
——
50
வெளியேறுவது வாழ்க்கை, உள்நுழைவது சாவு

வெளியேறுவது வாழ்வு, உள்நுழைவது சாவு
குருவானவர் தற்கணம் என்ன கொண்டுவருகிறதோ
அதற்கு ஒப்புக்கொடுக்கிறார்
தான் இறக்கப்போவது அவருக்குத் தெரியும்
அவர் எதையும் பற்றிக்கொள்வதில்லை
மனதில் அவருக்கு எந்த மாயையும் இருப்பதில்லை
உடலில் எந்த எதிர்ப்பும் இருப்பதில்லை
அவர் தன் செயல்களைப் பற்றி சிந்திப்பதில்லை
அவை அவருடைய ஆத்ம மையத்திலிருந்து ஒழுக்காய் நிகழ்கின்றன
யாரொருவர் ஆரோக்கியத்தைப் பேணுகிறாரோ அவர் புலிகளையும் காண்டாமிருகங்களையும் பார்க்காமல் பயணம் மேற்கொள்வார்
ஆயுதங்களை வீசாமல், கவசங்களை அணியாமல் அவர் படையோடு சேர்ந்திருப்பார் என்று சொல்லப்படுகிறது
குருவானவர் வாழ்க்கையிலிருந்து எதையும் பற்றி நிறுத்துவதில்லை
ஆகையால் அவர் மரணத்திற்குத் தயாராக இருக்கிறார்
நாள் முழுவதும் வேலை செய்து களைத்த
ஒருவர் நல்ல தூக்கமொன்றிற்குத் தயாராக இருப்பது போல
—-