இலக்கிய இன்பம் 71/கோவை எழிலன்

ஆனாலும் துயர் போச்சுப் போ

இரட்டையராகப் பிறந்தவர்கள் இரட்டைப் புலவர்கள். அவர்களில் மூத்தவரான முதுசூரியர்க்கு கால் நடக்க இயலாது. இளையவரான இளஞ்சூரியர் கண் பார்வை அற்றவர். இளஞ்சூரியர் தன் தோளில் வைத்து முதுசூரியரைத் தூக்கிச் செல்வார். பாடலின் முதல் இரு அடுகளை முதுசூரியரும் அடுத்த இரு அடிகளை இளஞ்சூரியரும் பாடுவர்.

ஒருமுறை இளஞ்சூரியர் பொற்றாமரைக் குளத்தில் ஆடை தோய்த்துக் கொண்டிருந்த போது ஆடை அவரிடமிருந்து நழுவிப் போய் விட்டது. அதைக் கண்ட முது சூரியர் தினமும் ஆடையை அடித்துத் தோய்த்தால் அது நம்மை விட்டு தப்பிச் செல்லாதா என்றார். அதற்கு இளஞ்சூரியர் அந்த ஆடை ஆயிரம் ஓட்டை கொண்ட கந்தல். போனால் போகட்டும் என்று பாடினார்.

முது சூரியர் விடாமல் கந்தலானாலும் குளிர் படாமல் போர்த்திக் கொள்ள உதவுமே என்றார். இளஞ்சூரியர் இக்கலிங்கம்(இவ்வாடை) போனால் என்ன சொக்கலிங்கம் இருக்கையிலையே என்று பாடினார். பின் சிவபெருமான் அருளால் நீரில் போன ஆடை கிடைத்தது என்பர்.

பாடல்கள் கீழே.

“அப்பிலே தோய்த்து
அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது
தப்பாதோ – செப்பக்கேள்
ஆனாலும் கந்தை,
அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர்போச்சுப்
போ

கண்ணாயிர முடைய
கந்தையே யானாலும்
தண்ணார் குளிரையுடன்
தாங்காதோ?’ – எண்ணாதீர்,
இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே
துணை!”