
சொற்கள் அறுந்தவிழும் ஓசை
கவிதையில் கேட்டது….
அது பேரோசையல்ல
கடந்துசென்றவர்கள் கவனித்துச்செல்ல…
அவர்கள் ஏதேனும் கால அவசரத்தில்
இருந்திருக்கக்கூடும்.
எல்லோருக்குமான கவிதை
எழுதப்படாமலே இருக்கிறது….
முழுதும் வாசிக்கப்பட்ட கவிதைகள்
ஆசிர்வதிக்கப்பட்டவை…
புலனத்தில் நிறைந்துவிழும்
கவிதைகள் வாசிக்கபடாமலே
சுத்தம் செய்யப்படுகின்றன…
தன்னிருப்பை ஏதேனும்
ஒருவழியில் காட்டிக்கொள்ளும்
கவிதைகள்…விளங்காமல்
விவாதத்தில் இருக்கிறது…
கவிதை….
சொல் அலங்காரமற்று
நேரே முகத்தில் அறையும்போது
கவிஞன் இல்லாமல் போகிறான்….
கவிதை அவனைச் சொல்கிறது.
