
வணக்கம் அன்பர்களே..
காசி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது.. கோவில்.. கங்கை.. பித்ரு கார்யம்.. பனாரஸ் ஹிந்து பல்கலைகழகம்.. மீசைக் கவி சுப்ரமணியபாரதி..
சமீபத்தில் காசி விஜயத்தின் போது சுப்ரமணிய பாரதி காசியில் வாழ்ந்த வீட்டை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.. (”காசிக்கு போவதென்றால் அவசியம் பாரதி இருந்த வீட்டைப் பார்த்து விட்டு வாருங்கள்” என்று கல்கி ஆசிரியர் திரு. ரமணன் சார் நான் கிளம்பும் முன் கூறியிருந்தார்).

காசியில் பாரதி வாழ்ந்த சில வருடங்கள் அந்த வீட்டில் தான் தங்கியிருந்தாராம். அது அவருடைய சித்தியின் வீடு..
“இது மொதல்ல கோவில்.. கோவிலை வெச்சுத் தான் இந்த வீடு”
பாரதியின் சித்தியின் பெயர்த்தி டாக்டர் ஜெயந்தி சொன்ன செய்தி இது. இவர் தான் இப்போது இந்த வீட்டை பராமரித்து வருகிறார். சிவனுக்கும் விசாலாட்சிக்கும் தனி தனி சந்நிதி..
“எங்க தாத்தா மொதல்ல இந்த கோவிலைத் தான் கட்டினார்.. அப்புறம் கோவிலைத் தொட்டு இந்த வீட்டைக் கட்டினார்”

டாக்டர் ஜெயந்தி சொன்னதும் வீட்டை சுற்றி பார்வையை வீசினேன்.. அந்தக் காலத்து வீடு.. சின்ன தாழ்வாரம்.. சுற்றி சில அறைகள். எதுவும் புதுப்பிக்கப் படாமல் அந்தக் காலத்தில் இருந்தது போலவே இருக்கிறது. புனிதம் கருதி நான் புகைப்படம் எடுக்கவில்லை..
“இதோ.. இந்த தாழ்வாரத்துல உட்கார்ந்து தான் பாரதி “வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள்” பாட்டை எழுதினாராம்”
சந்நிதியில் விளக்கேற்றியபடி டாக்டர் ஜெயந்தி சொன்னவுடன் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது உண்மை..
டாக்டர் ஜெயந்தியின் தகப்பனார் டாக்டர் கிருஷ்ணன்.. தொண்ணூற்றி இரண்டு வயது இளைஞர்.. இந்த வயதிலும் ஜூம் மூலம் பல உரைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.. இவர் பாரதியைப் பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார்.. அதில் பாரதி காசிக்கு வந்த காரணத்தைப் பற்றியெல்லாம் விவரமாக குறிப்பிட்டிருக்கிறாராம்.. இந்தப் புத்தகம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று மூன்று மொழிகளில் கிடைக்கிறதாம்.
டாக்டர் ஜெயந்தியும் பாரதியின் கவிதைகளை ஹிந்தியில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்..
பல வருடங்களாக சாந்தமாக இருந்த இந்த வீடு சமீபத்தில் தமிழ் சங்கமத்தின் போது மத்திய அரசாங்கம் தலையிட்டு சில முக்கிய பிரமுகர்கள் விஜயம் செய்த பிறகு கொஞ்சம் பிரசித்தி பெற்று விட்டது.. அந்த வீடு இருக்கும் தெரு முனையிலேயே “மஹாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டுக்குப் போகும் வழி” என்ற வழிகாட்டிப் பலகை பாரதியைப் போலவே கம்பீரமாக நிற்கிறது..
பக்கத்துத் தெருவிலேயே பாரதிக்கு இன்னொரு சிலை.. ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சட்ரம், வாரணாசி பராமரிப்பில் உள்ளது..
பாருக்குள்ளே நல்ல நாடு.. எங்கள் பாரத நாடு என்று பாடிய அந்தப் புலவனை பாரதம் முழுவதும்.. ஏன் அகிலம் முழுவதும் போற்றுவது தானே நிதர்சனம்..
